ரயில் தடம் புரண்ட பாலம் விரைவில் சீர்செய்து தரப்படும்: பொறியியலாளர் ரஞ்சித்

Report Print Thirumal Thirumal in அபிவிருத்தி

கொட்டகலையில் புகையிரதம் தடம்புரண்டதில் பழுதடைந்த பாலத்தை விரைவில் சீரமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரத நிலைய ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பதுளை பிரதான புகையிரத பாதையிலுள்ள கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் கடந்த 13 ம் திகதி அதிகாலை புராதன 60 அடி பாலத்திற்கு அருகாமையில் புகையிரதம் தடம்புரண்டது.

இதனால் மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலேயே புகையிரத நிலைய ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிறி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் பழுதடைந்த புகையிரத பயணிகள் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து சீர்செய்து அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாலத்தை புனரமைப்பதற்கு இன்னும் 3 வாரங்கள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு ஊழியர்கள் இரவு, பகல் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் இப்பாலம் பழமை வாய்ந்ததன் காரணமாக எதிர்காலத்தில் இப்பாலத்தை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிறி மேலும் தெரிவித்துள்ளார்.