தேசிய நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டம்

Report Print Kannan Kannan in அபிவிருத்தி
advertisement

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட அரசாங்க செயலகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த கூட்டத்தின் போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, வீதி அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தேசிய நல்லிணக்கக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டத்தினை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பாலம், குருமன்வெளி - மண்டூருக்கான பாலம், நரிப்புல் தோட்டம் - பன்குடாவெளி, கிண்ணையடி, திகிலிவெட்டை, ராணமடு ஆகிய பாலங்கள் அமைத்தல்.

1344 கிலோ மீற்றர் கிராமிய வீதி அமைப்பு, மட்டக்களப்பிலிருந்து கல்குடா வரையான கடற்கரையோரப் பாதை ஆகியன அமைப்பதற்கான அனுமதிகள் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் 10.08.2017 திகதி கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஆர்.பாஸ்கரலிங்கத்திடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முன்வைத்த திட்ட அறிக்கைக்கமைய இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க அதிபரிடம் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசாங்க அதிபருக்கு இத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்திட்ட முன்மொழிவுகள் அமைச்சுக்கு நேரடியாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட திட்டமிடல் செயலக உத்தியோகத்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த 8 அபிவிருத்தித் திட்டங்களுக்கென 8000 மில்லியனுக்கு அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.

இதில், வெள்ள காலத்தில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வள்ளங்கள் மூலமான போக்குவரத்தினை மேற்கொள்ளும் அதே நேரம், ஏனைய காலங்களிலும் போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிரான்- தரவைப் பிரதேசத்துக்கான பாலம் 1531 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

இயந்திரப் பாதைப் போக்குவரத்து நடைபெற்று வரும் மண்முனை தென்மேற்கு மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைக்கும் குருமன்வெளி - மண்டூர் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ஆற்றுக்கு மேலாக 1400 மில்லியன் ரூபா செலவில் பாலம் அமைக்கப்படவுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நரிப்புல் தோட்டம் - பன்குடாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ஆற்றைக் குறுக்கறுத்து 650 மில்லியன் ரூபா செலவில் பாலம் அமைக்கப்படவுள்ளது.

கோரளைப்பற்று மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செலயகப்பிரிவுகளை இணைக்கும் கிண்ணையடி - முருங்கன் தீவு ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பாலம் 850 மில்லியன் ரூபாவிலும், சந்திவெளி - திகிலிவெட்டை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையிலான பாலம் 1200 மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்படவுள்ளன.

போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையன்கட்டு - ராணமடு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் பாலம் 120 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதே நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய வீதிகள் மற்றும் மேம்படுத்தப்பட தேவையுள்ள பிரதேசங்களின் 1344 கிலோமீற்றர் வீதிகள் 722 மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்படவுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கல்குடா வரையான கடற்கரையோர பாதை 3000 மில்லியனிலும் அமைக்கப்படவுள்ளது.

இதுவரை 5 வருட அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட 28000 மில்லியன் ரூபா பெறுமதியான திட்ட முன்மொழிவுகள் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement