மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டடம் மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைப்பு

Report Print Evlina in அபிவிருத்தி

ஒருகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டடத்தொகுதி திறந்து வைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

தேசிய பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் அதிகார சபையின் கீழ் இயங்கும் இந்த நிறுவத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்புக் கடனுதவி வழங்கியுள்ளதுடன், 1540 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கட்டடம் நிர்வாகம் மற்றும் பயிற்சி பிரிவு ஆகியன 8,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நிலையத்தில் காணப்பட்ட அனைத்து இயந்திரங்களும், பொறிகளும் திருத்தப்பட்டு மீள நிறுவுதல், நவீன தொழில்நுட்ப முறைகளைக் கற்பதற்கான பயிற்சி இயந்திரங்கள் ஐந்தினை புதிதாக நிறுவுதல், அதிகளவான பயிலுநர்களை புதிதாக சேர்த்துக்கொள்ளக் கூடியதாக இருத்தல் மற்றும் எதிர்காலத்தில் தேவையேற்படின் கட்டடத்தில் மேலும் 05 மாடிகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய வகையில் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வில் அமைச்சர் சந்திம வீரக்கொடி, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பிரதி அமைச்சர்கள் கருணாரத்ன பரனவித்தான, பிரசன்ன சோலங்கஆரச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சின் செயலாளர் பீ.ரனேபுர, அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.