தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

Report Print Ashik in அபிவிருத்தி

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வந்த அசாதாரண காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார், அடம்பனில் நேற்று மாலை சதொச நிறுவனக்கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே இருந்தது. தற்போது, கடந்த வருட இறுதிக் கணக்கெடுப்பின் படி 3.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.

300 மில்லியன் நஷ்டத்தில் இயங்கிய சதொச நிறுவனத்தை இன்று இலாபமீட்டும் நிறுவனமாக நாம் மாற்றியுள்ளோம்.

ஒரு பிரதேசத்தில் சதொச நிறுவனங்களை ஆரம்பித்தால், அந்தப் பிரதேச வியாபாரிகள் கவலையடைவதோடு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவது சகஜமானதே.

எனினும், மக்களின் நன்மை கருதியே அத்தியாவசியப் பொருட்களை சதொச நிறுவனத்தின் ஊடாக வழங்கி வருகின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அரிசியின் விலை வெளியிடங்களில் 100 ரூபாவாக தற்போது அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

தொடர்ச்சியாக நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும், சதொச நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து பாவனையாளர்களுக்குத் தட்டுப்பாடின்றி விநியோகித்து வருகின்றது.

இந்தவகையில், நாட்டரிசி 70 ரூபாவுக்கும், பொன்னி அரிசி 71 ரூபாவுக்கும் தாராளமாக பெற்றுக்கொள்ள முடியும்.

தேவை ஏற்படின் தனியார் வியாபாரிகளுக்கும் நாங்கள் 24 மணிநேரத்துக்குள் அரிசியை விநியோகிக்க முடியும்.

அரசு மாட்டுமே மேற்கொண்டு வந்த அரிசி இறக்குமதியை, தனியாரும் இறக்குமதி செய்யும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

ஒரு காலத்திலே சதொச நிறுவனத்தை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்த போது, கடந்த இரண்டு வருடங்களில் பாரிய மற்றங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

அனைத்துக் கிளைகளுக்கும் கணணி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சீ.சீ.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.