விரும்பும் துறையை தெரிவு செய்து கற்பதற்கு மாணவர்களுக்கு பெற்றோர் இடமளிக்க வேண்டும்

Report Print Reeron Reeron in கல்வி

ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரைக்கும் மாணவர்களின் விருப்பத்திற்கு அமைய கல்விப் பாடங்களை தெரிவு செய்து கற்பதற்கு மாணவர்களுக்கு, பெற்றோர்கள் அனுமதி வழங்கவேண்டும் என சந்திவெளி வர சித்தி விநாயகர் ஆலயத்தின் குரு கா.கிருஸ்ணானந்தர் தெரிவித்துள்ளார்.

சந்திவெளி கிராமத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆன்மீகத்தோடு சேர்ந்த நடைமுறை வாழ்க்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல நடமுறைக் கருத்துகளை சொற்பொழிவாக வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு கல்வியில் அன்பு மற்றும் விருப்பம் இருத்தல் வேண்டும். எமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றார்கள் என பெற்றோர்கள் கவனக் குறைவாக இருக்ககூடாது.

எதிர் காலத்தில் எமது குழந்தை எவ்வாறான நிலைக்கு உயர் பதவிகள் நற்பண்புள்ளவனாக வரவேண்டும் போன்ற ஆசை என்பது ஒவ்வொரு பெற்றோர் மத்தியிலும் வளர வேண்டும்.

இன, மத, பேதம் கடந்து கல்வி அனைவருக்கும் பொதுவானது. கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியை இந்துக்கள் வழிபடுகின்றார்கள்.

மாணவர்களுக்கு காலையில் எழுந்ததில் இருந்து நற்பண்புகளையும் நல்ல செயற்பாடுகளையும் சொல்லிக் கொடுங்கள். இறை சிந்தனைகளை பெற்றோர்கள் மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் சிறிய வயதில் நல்ல சித்திகளைப் பெற்றுக் கொண்டு உயர் தரத்திற்கு செல்கின்ற போது கல்வி நிலை பாழாகின்றது. இதற்கு காரணம் பெற்றோர்களுக்கு முக்கிய பங்குண்டு, பிள்ளை வளர்ந்து விட்டது என கருதி அலட்சியப் போக்காக விட்டு விடக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள மாவட்டமாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற போது மட்டக்களப்பு கல்வியலாளர்கள் புத்தி ஜீவிகள் இவற்றுக்கு என்ன செய்ய முடியும் என்கின்றதாக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மற்றைய இன மற்றும் மதத்தில் உள்ள புத்தி ஜீவிகள் கல்வியால் மாத்திரம் எந்த எந்த பதவிக்கு தங்களின் சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமோ, அந்த வழிகளைக் கையாண்டு அதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றுவருகின்ற வேளையில் எமது தமிழ் சமூகம் உயர் தர படிப்பைக்கூட முறையான அளவிற்கு வெற்றி பெற கடும் முயற்சிகளை கூட மேற்கொள்ளாத சமூகமாக மாறிவிட்டது.

இதற்கெல்லாம், நல்ல சீர் ஒழுக்க நடத்தைகளில் இருந்து விடுபடுவதுதன் காரணமாக இருக்கின்றது. ஐந்தாம் தரம் வரைஸ்ரீ தன்னுடைய பிள்ளை பரீட்சையில் வெற்றி பெறவேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் அதே போக்கை உயர்தரம் வரை மாணவர்கள் மத்தியில் அக்கரை செலுத்தினால் நிச்சயம் சிறந்த பலா பலனைப் பெறமுடியும்.

இன்றைய சூழ் நிலையில் பெற்றோரை மதிப்பதில்லை, பெற்றோர் ஆசியில்லை, பெற்றோர் சொல் கேட்பதில்லை, பாடசாலை மற்றும் ஆசிரியர்களை மதிப்பதில்லை போன்றவை மாணவர்களின் கல்வி நிலையில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன.

கல்குடா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பகுதிகளும் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் குறித்த வலயத்தில் பல உயர் பதவிகளுக்கு மாணவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு மாணவர்களை பெற்றோர்கள் ஆசை வைத்து மனம் வைத்து படிக்க வைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.