சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின விழா

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஆய்வரங்கம் இன்றைய தினம் ஆரம்பமானது.

இரண்டு பகுதிகளாக நடைபெறுகின்ற குறித்த நிகழ்வில் காலை ஆய்வரங்கமும் மாலை விபுலானந்தர் ஆவணப்பட அறிமுக நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆய்வரங்க நிகழ்வு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன்போது பிரதம அதிதியாக புதுச்சேரி அரசின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ் துறை துணைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மா.செல்வராஜா,சுவாமி விபுலானந்தரின் சகோதரியின் மகனும் ஓய்வுநிலை பொறியியலாளருமான பூ.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யாழ். நூலை உருவாக்க உதவிய தமிழ் இலக்கியங்கள், யாழ்.நூலும் இசையும் கணிதமும், மதங்க சூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும், மதங்க சூளாமணியும் சமஸ்கிருத நாடகங்களும் போன்ற தலைப்புக்களின் கீழ் உரையாற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் பெருமளவான எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.