கிழக்கு பல்கலையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை: கலை, கலாச்சார பீட மாணவர்கள்

Report Print Navoj in கல்வி

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு கலை கலாச்சார பீட மாணவர்கள் ஆதரவு வழங்கவில்லை என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனால், கலை, கலாச்சார பீடத்திற்கான கல்வி நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களிலுள்ள ஒரு தரப்பு மாணவர்களினால் கடந்த 08ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் இன்று வரை சீர்குலைந்து காணப்படுகின்றது.

இந்த செயற்பாடுகளுக்கு கலை கலாச்சார பீட மாணவர்களினால் எவ்வித ஆதரவும் வழங்கப்படவில்லை. இருந்த போதும் இந்த செயற்பாட்டிற்கு கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தின் ஆதரவும் வழங்கப்பட்டிருப்பதாக கடந்த 13ம் திகதி நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது அனைத்து மாணவர் ஒன்றியத் தலைவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும். இவ்வாறான செயற்பாட்டிற்கு எமது கலை கலாச்சார பீடத்தினால் எவ்வித ஆதரவும் வழங்கப்படாத போதிலும் கலை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே கலை கலாச்சார பீட மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு உடனடியாக கலை கலாச்சார பீடத்தினுடைய கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கலை கலாச்சார பீடாதிபதியூடாக பல்கலைக்கழக உபவேந்தருக்கு இவ்வறிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.