உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றம்! கலாநிதி றியாஸின் வேண்டுகோளுக்கு வெற்றி

Report Print Aasim in கல்வி

எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு கலாநிதி றியாஸ் விடுத்த வேண்டுகோள் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதி வருடம் தோறும் அரசாங்கத்தின் விடுமுறை தினங்கள் அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறை தினமாக அனுமானிக்கப்பட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தலைப்பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்களின் சம்பிரதாயப்படி இம்முறை ஹஜ் பெருநாள் தினம் செப்டம்பர் இரண்டாம் திகதி கொண்டாடப்படும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்திருந்தது.

இதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை கால அட்டவணையின் பிரகாரம் செப்டம்பர் முதலாம் திகதி விடுமுறை தினமாகவும், செப்டம்பர் இரண்டாம் திகதி பரீட்சை நடைபெறும் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹஜ் பெருநாள் தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக செப்டம்பர் 02ம் திகதி நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள முஸ்லிம் பரீட்சார்த்திகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே செப்டம்பர் 02ம் திகதி நடைபெறவுள்ள பரீட்சையை பிறிதொரு தினத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் கலாநிநி றியாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோருக்கு பக்ஸ் மூலம் வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் கலாநிதி றியாஸின் வேண்டுகோள் இன்றைய தினம் பலனளித்துள்ளது. செப்டம்பர் 02ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சையை மூன்றாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக பரீட்சை அட்டவணையை மாற்றியமைத்த கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கலாநிதி றியாஸ் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.