ஆலயங்களில் பட்டாசு கொழுத்தும் நிதியை கல்விக்கு பயன்படுத்துங்கள்

Report Print Navoj in கல்வி

ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் பட்டாசு கொழுத்துகின்ற நிதியை பிள்ளைகளின் கல்விக்கு செலவிட முன்வர வேண்டும் என வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனையில் அமரர்.வேலாயுதம் ஞானமுத்துவின் ஞாபகார்த்தமாக, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பும், பூவல் சஞ்சிகை வெளியீடும் ஆலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலய தலைவர் இ.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

ஆலயங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எந்த உதவிகளையும் கடந்த காலங்களில் வழங்கவில்லை. தற்போது அந்த முனைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு மாணவச் செல்வங்களை உற்சாகப்படுத்துவதற்கும் அதற்கான வளங்களை பெற்றுக் கொள்வதற்கும் ஒற்றுமை மிக அவசியமாக உள்ளது.

எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

கல்வி ஒன்றே தான் நாம் இழந்த இழப்புக்களையும் ஈடுசெய்யக் கூடியதாகவுள்ளது. எமது ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் பட்டாசு கொழுத்துகின்ற நிதியை பிள்ளைகளின் கல்விக்கு செலவிட்டால் எமது சமூகத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும். என்றார்.