யாழ்.பல்கலை.யில் கற்கும் சிங்கள மாணவர்களுக்கு..

Report Print Samy in கல்வி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிங்கள மாணவர்களுக்கு அன்பு வணக்கம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற இந்த வேளையில் இக்கடிதத்தை எழுத விழைந்தோம்.

எங்கள் நாடு ஒற்றுமையாக - சுபீட்சமாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காகவே இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நீங்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் கலை - கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை நன்கு அறிந்திருப்பீர்கள்.

கூடவே உங்களில் பலர் தமிழ் மொழியை பேசவும் கற்றிருப்பீர்கள். இது உங்களுக்கு கிடைத்த ஒரு கொடை எனலாம்.

பொதுவில் தமிழ் மக்களுக்குத் தென்பகுதித் தொடர்புகள் இருந்தமையால் அவர்களில் ஒரு பகுதியினர் சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொண்டனர்.

தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றறிந்திருப்பது தொடர்பாடலுக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் பேருதவியாக அமையும்.

எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தமிழ், சிங்களம் என்ற இரு மொழிக் கற்றலுக்குத் தடையாகவே இருந்துள்ளன.இருந்தும் கடந்தவை கடந்து போக, சமகால சூழ்நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமாகும்.

அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்த உங்களுக்கு தமிழ் மொழியை பேசுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது.

இது தவிர இன்னுமொரு மிகச்சிறந்த சந்தர்ப்பம் உங்களுக்குரியதாகின்றது.அதாவது தமிழ் மக்கள் படும் அவலங்கள் அவர்களின் இழப்புக்கள் பற்றி தென்பகுதிக்குத் தெரிவிக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு மட்டுமானது.

நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அதேநேரம் தமிழ் மக்கள் தொடர்பில் தென்பகுதியில் ஒரு புரிதலை ஏற்படுத்த உங்களுக்கு நிறைந்த சந்தர்ப்பம் உண்டு.

பேரினவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் தொடர்பில் தவறான கருத்துக்களைத் தென்பகுதியில் விதைத்துள்ளனர்.

இதனால் இன்றுவரை தென்பகுதி மக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதுடன் தமிழ் மக்கள் பெளத்த சிங்களத்துக்கு எதிரானவர்கள் என்ற நினைப்பையும் கொண்டுள்ளனர்.

இத்தகைய நினைப்புகள் இருக்கும் வரை இலங்கைத்தீவு ஒருபோதும் உருப்படமாட்டாது.

எனவே சிங்கள, தமிழ் மக்கள் தொடர்பிலான பரஸ்பர புரிதலை ஏற்படுத்த நீங்கள் நினைப்பீர்களாக இருந்தால், அதனை அமுலாக்க முற்பட்டால் அது இலங்கை மாதாவுக்கும் மக்களுக்கும் நீங்கள் செய்யும் மிக உயர்ந்த கைமாறாகும்.

இதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையை இக்கடித வாயிலாக உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்

- Valampuri