உறவுகளின் உரிமைகளை வென்றெடுக்க உதய சூரியன் சின்னத்தில் போட்டி

Report Print Nesan Nesan in தேர்தல்

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

சம்பூர் கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது போராளிகளாகிய நாம் எமது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் போராடி பல நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து, விழுப்புண்களையும் உடலில் சுமந்துள்ளோம்.

தற்போது எமது உறவுகளுக்கான உரிமைகளை ஜனநாயக ரீதியாக மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் கொள்கை அடிப்படையில் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் மற்றும் சம்பூர், மூதூர் போன்ற பிரதேச சபைகளில் வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகின்றோம்.

எமது பிரதேசம் கடந்த யுத்த சூழ்நிலையிலும் எந்த முன்னேற்றமும் அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. யுத்தம் முற்றுப் பெற்ற பின்னரும், அபிவிருத்தியில் எமது பிரதேசம் கூடுதலாக புறக்கணிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இருந்தும் கவனிபில்லாமல் இருக்கின்றது.

இதற்கு ஒரு வழி உரிமைகளுக்காக போராடிய நாம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் கிராம மட்டங்களில் உள்ள அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.