மக்களை அச்சமான சூழ்நிலைக்குள் வைத்திருக்கவே நல்லாட்சி அரசுக்கு விருப்பம்

Report Print Yathu in நிகழ்வுகள்

மக்களின் மனநிலையைக் குழப்பி அவர்களை ஒரு அச்சநிலைக்குள் வைத்திருக்க வேண்டுமென இந்த நல்லாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு முதன்மை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலின் அஞ்சலி நிகழ்வு நேற்று(18) நடைபெற்றது.

தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளுமின்றி அன்றாட உணவிற்கே அல்லல்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறு மக்கள் துன்பத்தில் இருக்கின்ற இந்த தருணத்தில் மக்களின் மனநிலையைக்குழப்பி ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் வைத்திருக்க வேண்டுமென்றே இந்த நல்லாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.

இதில் ஒரு அங்கமாகவே நேற்று நள்ளிரவு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதாக ஒரு நாடகத்தையாடி மக்களை ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் வைத்திருக்க நினைக்கின்றது.

அநாகரிகமான அரசியல் இந்த மண்ணில் நடக்கின்றது. மாணவர்கள் சமூகம் அரசியல் செய்வதை விடுத்து கல்வியில் முன்னேற்றம் கண்டு இந்த மாவட்டத்தை கட்டியெழுப்பவேண்டும்.

இந்த மண்ணில் போதைப்பொருள் பாவனை என்பது சகல இடங்களிலும் தலைவிரித்தாடுகின்றது. யுத்தத்தின் பின்னர் பார்க்கும் இடமெல்லாம் இராணுவம் பொலிஸ் புலனாய்வாளர் என அதிகளவிலே காணப்படுகின்றனர்.

போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகின்றன. ஆனால் அதைக்கொண்டு வருகின்ற ஆட்கள் பிடிக்கப்படுவதில்லை.

எங்களுடைய இளம் சமூகத்தை சீரழிக்க வேண்டுமென்பதே இவர்களின் பிரதான நோக்கமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments