பரிஸில் இலங்கை பெண்ணிடம் கைவரிசை! நபர் மீது தாக்குதல் நடத்திய தமிழர்கள்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்

பிரான்ஸ் வடக்கு பரிஸ் பகுதியில் இலங்கை தமிழ் பெண் ஒருவரின் பையை பறித்த நபரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை மடக்கி பிடித்த மக்கள் கடுமையாக தாக்கியுள்ளதுடன், கத்தி குத்து தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திருடனின் வயிற்று பகுதியில் இரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகமான இலங்கை மக்களின் கடைகள் மற்றும் உணவகங்கள் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென 12 பேர் கொண்ட குழுவினர் 26 வயதுடைய இளைஞனை துரத்தி சென்று தாக்கியுள்ளனர். அந்த இளைஞர் குறித்த பகுதியை விட்டு வெளியேற முடியாத வகையில் தடுத்து தாக்கப்பட்டுள்ளார்.

மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார் சென்றுள்ளனர். இதன் போது இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த இளைஞனால் இலங்கைப் பயணியிடம் இருந்து பறித்த பையும் அவர் அருகில் கிடந்துள்ளது.

இதன் போது சந்தேக நபரின் வயிற்று பகுதியில் இரண்டு கத்தி குத்து காயங்களை அவதானித்த பொலிஸார் உடனடியாக அம்பியுலன்ஸ் சேவைக்கு அழைப்பேற்படுத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பரிஸ் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள திருடர்களால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

லாச்சப்பல் என்ற பகுதியில் இலங்கையர்களினால் நடத்தப்படும் கடைகள் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ் மொழியே அந்த தெருக்களில் கேட்கப்படும் பிரதான மொழி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video..