சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் நடக்கும் அட்டூழியங்கள்!! அதிகாரி பரபரப்பு அறிக்கை

Report Print Samy in இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த பெப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் அவரது அண்ணியான இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் விஐபிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதனை மறுத்து வந்தது.

இந்நிலையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் சசிகலா மற்றும் பல தண்டனை கைதிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு விசேட சமையலறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது சிறை விதிகளை மீறிய செயல் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என கூறப்பட்டது. ஆனால் அவை இன்னும் தொடர்கிறது.சிறையில் சில வசதிகளை பெற சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணையில் தான் இறங்கியது முதல் சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ் தனது வேலையில் குறுக்கிட்டு வருவதாகவும், கடந்த 11ம் தேதி தனக்கு மெமோ கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது மெமோவில் எதற்காக சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்றேன் என விளக்கமும் கோரியுள்ளார், தனக்கு சென்ட்ரல் சிறைக்கு செல்ல முழு அதிகாரமும் உள்ளது என்றும் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

முத்திரைத்தாள் மோசடி குற்றவாளி அப்துல் கரீம் தெல்கி 4 உதவியாளர்களுடன் சிறை வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அவருக்கு உதவியாளர்கள் மசாஜ் கூட செய்து விடுகின்றனர். அவரது வீல்சேரை தள்ளுவதற்கு கோர்ட் ஒரு உதவியாளரைதான் அனுமதித்தது.

ஆனால் அவருக்கு 4 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை சிசிடிவி கேமரா மூலம் நீங்களே பார்க்க முடியும் என நம்புகிறேன் என்றும் தனது உயர் அதிகாரியிடம் ரூபா தெரிவித்துள்ளார்.

கடந்த 29ம் தேதி தலைமை மருத்துவ ஊழியர் உட்பட 10 பேர் கைதி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியையும் காணவில்லை. ஆனால் இதுகுறித்து கைதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போதை பொருள் பயன்படுத்துவது தொடர்பாக 25 கைதிகளை ஆய்வு செய்ததில் அவர்களில் 18 பேர் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. சிறைக்குள் கஞ்சா எப்படி விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ரூபா கூறியுள்ளார்.

கைதிகள் மருத்துவ அறிக்கைகளை அழிக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த சில மருத்துவ அறிக்கைகள் மாயமாகியுள்ளன என்றும் ரூபா தனது உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் உள்ள மருந்தகத்தையும் கைதிகள் ஆட்கொண்டுவிட்டனர். தூக்க மாத்திரை போன்றவை அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி கைதிகள் மருத்துவர்களை அச்சுறுத்துகின்றனர். பல மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன என்றும் டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறைத்துறை டிஜிபி மறுப்பு டிஜிபி ஹெச்எஸ்என் ராவுக்கு சிறையில் நடப்பதெல்லாம் தெரியவில்லை. அவரை சில அறிக்கைகள் சென்றடைவதும் இல்லை என்றும் ரூபா தனது உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை டிஜிபி ராவ் மறுத்துள்ளார்.