இந்தியாவுக்குள் ஊடுறுவிய பாகிஸ்தான் படைகளால் பதற்றம்

Report Print Murali Murali in இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் படையினர் மீது இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து நிலையில், பாகிஸ்தான் படையினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இந்திய இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நிலை தடுமாறிய பாகிஸ்தான் இராணுவத்தின் வாகனம், அருகிலுள்ள ஏரியில் வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நால்வர் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை அத்துமீறி நுழைந்து இந்திய இராணுவ முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் மஞ்சாகோட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இராணுவ நடவடிக்கை காரணமாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.