அரசியலில் கால்பதிக்கும் நடிகர் கமல்ஹாசன்! தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு

Report Print Murali Murali in இந்தியா

சமீபகால தமிழக அரசியலில் பேசப்படும் நபராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக The Quint ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அண்மைய காலங்களில் வெளிவந்த சர்ச்சைகளுக்கு நடிகர் கமல்ஹாசம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், The Quint ஊடகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

அண்மையில் கேரள முதலமைச்சரை சந்தித்து பேசியிருந்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளேன்.

எனினும், எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

தமிழ் நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஏன் தமிழகம் என கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்குகலாம் என்று நினைக்கிறேன்.

மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கப்போவது கிடையாது.

மாறாக கட்டாயத்தின்பேரில் நடக்கப்போகிறது. ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை.

சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடிகர் கமல்ஹாசன் புதுக்கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவார் என அவருக்கு நெருக்கமானவர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.