கர்ப்பிணியான மருமகளை தீயினால் சுட்டு மாமியார் கொடுமை?

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை

பொகவந்தலாவையில், நான்கு மாத கர்ப்பிணியான மருமகளை தீக் கட்டையினால் சுட்டு மாமியார் ஒருவர் கொடுமை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில் வசித்து வரும் 22 வயதான லெச்சுமனன் விஜேமணி என்ற கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தீக் கட்டையினால் சுடப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் நேற்று மாதாந்த மருத்துவ பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணின் தலை, கை மற்றும் கால்களில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன.இதனை அவதானித்த மருத்துவ அதிகாரி இது குறித்து, விஜயமணியிடம் வினவியுள்ளார்.

அதன் போது தமது மாமியார் தம்மை இவ்வாறு கொடுமை செய்வதாகவும் தீக் கட்டடையினால் சுட்டதாகவும் அந்தக் கர்ப்பிணி பெண் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 பெப்ரவரி மாதம் 9ம் திகதி இந்தப் பெண் விவாகம் செய்து கொண்டுள்ளார்.இதற்கு முன்னர் கருவுற்றிருந்த காலத்தில் மாமியார் கொடூரமாக தாக்கியதனால் கரு கலைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது மாமியார், மூத்த பிள்ளையையும் இவ்வாறு தாக்குவதாகவும் இது கணவர் வேடிக்கை பார்ப்பாரே தவிர காப்பாற்ற மாட்டார் எனவும் விஜயமணி என்ற பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.