வித்தியா கொலை வழக்கு! ஒரு கண்ணோட்டம்

Report Print Samy in வாழ்க்கை முறை

13.05.2015 – காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியைத் தேடினார்கள்.

14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாயையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு ஊரவர்களுடன் சேர்ந்து தேடுகின்றார்கள். வித்தியா பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பாழடைந்த வீடொன்றின் பின்புறமாக, கைகள் கால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக மீட்கப்படுகின்றாள்.

14.05.2015. - புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவரும் கைது.

15.05.2015. – வாய்க்குள் துணி அடைந்தமையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும், தலை அடிபட்டதில் மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்டதாலும் மாணவி வித்தியா உயிரிழந்தார் என்று உடற் கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட் படுத்தப்பட்டமையும் உறுதி செய்யப்பட்டது.

15.05.2015. – வித்தியாவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. புங்குடுதீவில் கடையடைப்பு . தீவகத்துக்கான போக்குவரத்தும் இடைநிறுத்தம்.

17.05.2015 – வித்தியா கொலை தொடர்பில் மேலும் 5 பேர் கைது. சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, குறிகாட்டுவான் பகுதியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸ் காவலரணை முற்றுகையிட்டு மக்கள் இரவிரவாகப் போராட்டம். சில மணி நேரத்தில் சந்தேகநபர்களை பொலிஸார், கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பாணத்திற்கு கடல் வழியாக கொண்டு சென்றனர்.

மக்கள் ஆத்திரமுற்று காவலரணைத் தாக்கினார்கள். கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுடன் தொடர்புடையவர் என சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினார்கள்.

அவ்விடத்திற்குச் சென்ற தற்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியதை அடுத்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

19.05.2015. – சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் நபர் ஒன்பதாவது சந்தேக நபராக கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் கைது. (குறித்த நபர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸில் 17 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டு, யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி வெள்ளவத்தையில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டார்)

மாலை. புங்குடுதீவுக்குச் சென்ற கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளரான வி.ரி.தமிழ்மாறனே, சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவினார் எனக் கூறி ஊரவர்கள், அவரை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிஸ் வாகனத்திற்குள் முடக்கினர். பின்னர் கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தமிழ்மாறனை ஊரவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

20.05.2015. – மாணவிக்கு நீதி கோரி முழு அடைப்பு. அன்றைய தினம் சந்தேக நபர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை.நீதிமன்ற கட்டடத் தொகுதியைச் சுற்றி பெருமளவான மக்கள் கூடி நின்றனர். மதியம் 11. 30 மணி. மக்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல் வீசி தாக்குதல். கலகம் அடக்கும் பொலிஸார் போராட்டக்காரர்களைத் துரத்தினர். வன்முறையில் ஈடுபட்டனர் எனக்கூறி 139 பேர் கைது செய்யப்பட்டனர்.

20.05.2015 - மாணவியின் குடும்பத்தின் சார்பில் இலவசமாக முன்னிலை ஆவோம் என்றும் , சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையாக மாட்டோம். எனவும் யாழ். சட்டத்தரணிகள் கூட்டாக அறிவிப்பு.

26.05.2015 - வித்தியாவின் தாய், சகோதரனைச் சந்தித்து அரச தலைவர் ஆறுதல். “ விசேட நீதிமன்றம் மூலம் விரைவான விசாரணை, வித்தியா குடும்பத்துக்கு வீடு ” என்னும் வாக்குறுதிகளை வழங்கினார்.

15.12.2015 – பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் (வயது 26) எனும் நபரை ஊர்காவற்றுறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதிவான் நீதி மன்றில் முற்படுத்தினார்கள்.

19.02.2016 – குற்றப்புலனாய்வு துறையினர் மரபணுச் சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கைகளை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவு.

04.03.2016 – வித்தியாவின் கொலைக்கான காரணத்தை குற்றப்புலனாய்வு துறையினர் ஊர்காவற்துறை நீதிமன்றில் வெளியிட்டனர். “வித்தியாவை புங்குடுதீவைச் சேர்ந்த சிவதேவன் துஷாந்த் ஒரு தலைப்பட்சமாகக் காதலித்தார். ஆனால் வித்தியா அதற்கு உடன்படவில்லை. வித்தியாவைப் பழிவாங்க, தன் நண்பரான தில்லைநாதன் சந்திரஹாசனுடன் கூட்டுச் சேர்ந்து மாணவியைக் கடத்த திட்டமிட்டார். திட்டத்தின் சூத்திரதாரியாக மாறினார் சுவிஸ் குமார்.

இவர்களுடன் இருவர் துணைக்குச் சேர்க்கப்பட்டனர்.அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கும் வித்தியா குடும்பத்துக்கும் முன் பகை இருந்தது. அவர்களுக்கு எதிராக களவு வழக்கில் வித்தியாவின் தாயார் சாட்சியம் சொல்லி இருந்தார். திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வித்தியா கடத்தப்பட்டு கோரமாக கூட்டு வன்புணர்வின் பின் கொல்லப்பட்டார். துசாந்த், சந்திரஹாசன் ஆகிய இருவருமே கொலை செய்தவர்கள்” இதுவே குற்றப்புலனாய்வாளர்களின் அறிக்கை.

03.03.2016. – 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் கைது.

18.03.2016. – வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்று அறிவிப்பு.

01.04.2016 – பன்னிரண்டாவது சந்தேக நபராக தர்மகாலிங்கம் ரவீந்திரன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

20.04.2016. – மரபணு பரிசோதனை அறிக்கையை தம்மிடம் ஜின்ரேக் நிறுவனம் இதுவரை கையளிக்கவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவிப்பு. ஜின்ரேக் நிறுவன அதிகாரியை நீதி மன்றில் முன்னிலை ஆகுமாறு உத்தரவு.

09.05.2016. – வித்தியா கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமாருடன் தொடர்புகளை பேணியவர்கள், தப்பி செல்வதற்கு உதவியவர்கள், தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வுப் பிரிவு பணிப்பாளருக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு.

18.05.2016. – வித்தியா கொலை வழக்கின் மரபணுப் பரிசோதனை அறிக்கையை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு ஊர்காவற்றுறை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.(சம்பவம் நடந்து ஒரு வருடத்தின் பின்னர். )

18.07.2016.- வித்தியாவின் தாயை மிரட்டிய குற்றத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த சுவிஸ் குமாரின் தாயாரான மகாலிங்கம் தயாநிதி சிறைச்சாலை யில் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.

18.07.2016. – வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரும், அவரது தம்பி மகாலிங்கம் சசீந்திரன் ஆகிய இருவரும் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் இ. சபேசன் அனுமதி.

23.07.2016. – வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவுப் பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவிப்பு.

20.09.2016. – வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் , இனம் காணப்படக் கூடிய நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை உள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் மன்றில் தெரிவிப்பு.

09.11.2016 – வித்தியா கொலை வழக்கு தொடர்பில் மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சட்டமா அதிபருக்குப் பணிப்புரை.

22.02.2017 – வித்தியா கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்புச் சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஒப்புதல்.

22.02.2017. – வித்தியா கொலை வழக்கு 98 சதவீத விசாரணை கள் முடிவடைந்து விட்டதாக ஊர்காவற்றுறை நீதிவான் .எம்.எம். றியால் தெரிவிப்பு.

28.04.2017.- வித்தியா வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான ரவீந்திரன் ஆகியோர் சாட்சியங்கள் இல்லாமையால் வழக்கில் இருந்து விடுதலை.

05.05.2017. – வித்தியா கொலை வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் மே மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதி மன்றில் தெரிவிப்பு.

10.05. 2017 - புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித் துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

11.05.2017. – வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றிலையே நடைபெற வேண்டும் என கோரி மாணவியின் தாய் உட்பட புங்குடு தீவு மக்கள் போராட்டம்.

12.05.2017. – வித்தியா கொலை வழக்கு குற்றப் பகிர்வு பத்திர வழக்கேடுகள் யாழ். மேல் நீதி மன்றில் பாரப்படுத்தப்பட்டன.

29.05.2017. - வடமாகாணத்தில் முதலாவது “ ரயல் அட் பார் “ தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் கூடியது.

12.06.2017. - மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபா ல சிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லை நாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மன்றில் முற்படுத்தப்பட்ட னர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்ற சாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி கள் என மன்றுரைத்தனர்.

அதன்போது 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஏனைய 4ஆம் , 7ஆம் , 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் எதிரிகள் மீது முன் வைக்கப்பட்டன. 53 சாட்சியங்கள் அணைக்கப்பட்டன.

அத்தனை குற்றச்சாட்டுக்களும் எதிரிகளுக்கு தனித்தனியே மன்றில் உரத்த குரலில் வாசித்துக்காட்டப்பட்டன. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்தனர்.

பதில் சட்டமா அதிபர் தொடக்கவுரை

அன்றைய தினம் பதில் சட்டமா அதிபர் டபிள்யூ.டி. லிவேரா மன்றில் முன்னிலையாகி உரை நிகழ்த்தினார். அதன்போது , இந்த வழக்கின் 2ஆம் , 3ஆம் , 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகளே மாணவியைக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இவர்கள் நால்வரும் மாறி மாறி மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம். இதற்கு பன்னாட்டு ரீதியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதனால் இதைப் பன்னாட்டு குற்றம் என்று கூடச் சொல்லலாம். இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு செயற்பட்டு உள்ளனர்.

இந்தக் குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக காணொலியாகப் பதிவு செய்து பன்னாட்டுச் சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.

ஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6ஆம் எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.

பன்னாட்டுச் சந்தையில் தெற்காசிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடிக் காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சகபாடிக்குச் சொல்லி இருக்கின்றார்.

அதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்தக் குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.

ஏனைய 4ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் இந்த குற்ற செயலுக்கு உதவி அளித்தத்துடன் , திட்டம் தீட்டியுள்ளனர். இந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கப்பட்டுள்ள 41 குற்றச் சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவியின் தாயின் சாட்சியம்

அன்றயை தினம் வித்தியாவின் தாய் சாட்சியம் அளிக்கையில் , எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். சம்பவ தினத்தன்று (13.05.2015) காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலைக்குச் செல்லப் புறப்பட்டாள் நானே வீட்டுக் கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் அன்றைய தினம் தன்னுடன் கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாகக் கூறி சென்றார். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.

பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனைப் பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா அன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்யச் சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகள் எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள் என பொலிசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படிப்பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.

அன்றைய தினம் இரவு மழை பெய்து கொண்டு இருந்ததால் , மேற்கொண்டு பிள்ளையை தேடவில்லை மீண்டும் மறுநாள் (14ஆம் திகதி) காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்களுடன் வித்தியாவைத் தேடிச் சென்றோம்.

வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடிச் சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.

அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா “ என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடிச் சென்று வேறு ஆள்களை அழைத்து வந்தனர்.

நான் சுயநினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால், மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

29.06.2017.
ஐந்தாவது சாட்சியும், சட்டமா அதிபரினால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச தரப்புச் (கண்கண்ட) சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ் கரன் சாட்சியம் அளிக்கும் போது; ‘‘கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்குத் தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா எவரையும் காதலித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷாந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷாந்த்) என்பவர் வித்தியாவைக் காதலிப்பதாக கூறினார்.

அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம், பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அவ்வேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவார் ஆனால் வித்தியா கதைக்க மாட்டார். வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.

பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம். அவ்வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார்.

நாங்கள் புங்குடுதீவில் மாப்பிள்ளை என்பவர் வீட்டில் கள்ளுக் குடிப்போம் , அங்கே ரவியிடம் வித்தியாவை தூக்கித் தர சொல்லி பெரியம்பி கேட்டான். அப்போது அந்த இடத்தில் நானும், (5ஆம் எதிரி) பெரியம்பி, (2ஆம் எதிரி) ரவி, (6ஆம் எதிரி) சந்திரஹாசன் மற்றும் (3ஆம் எதிரி) தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.

வித்தியாவைத் தூக்கித் தாறது என்றால் எனக்கு 20, – 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினான். அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தைத் தருகிறேன் எனக் கூறினான். அதன் படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான்’’ என சுரேஷ்கரன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தான் சாட்சியம் அளிப்பதனால் தனது அல்லது தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் , அதனால் தான் ரகசியமான முறையில் சாட்சியம் அளிக்க போவதாகவும் மன்றில் கூறினார்.

அதனை அடுத்து மன்றில் இருந்த பொதுமக்கள் , ஊடகவியலாளர்களை வெளியே செல்லுமாறு மன்று அறிவித்தது. அதனை அடுத்து அவர் தனது மேலதிக சாட்சியங்களை மன்றில் பதிவு செய்தார்.

மாப்பிள்ளையின் சாட்சியம்.
வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் அன்றைய தினம் (29ஆம் திகதி) மாலை 4 மணியளவில் சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில்; அதில் ,

நான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கிக் குடிக்கிறவர்கள். ஒருநாள், தான் வித்தியாவைக் காதலிப்பதாகவும் , அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி, வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் என்னை அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் எதுவும் கதைக்கவில்லை.

மறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடிச் சந்திக்கு அருகில் வித்தியாவுக்காகக் காத்திருந்தோம். வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.

அவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும் , தவக்குமாரும் வந்திருந்தார்கள். அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன், சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.

சைக்கிளில் வந்த வித்தியா அவர்களுக்கு அருகில் வந்ததும் சந்திரஹாசனும் , பெரியாம்பியும் அவரை அவரை மறித்தனர். பின்னர் சந்திரஹாசன், பெரியாம்பி, ரவி , மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது வித்தியா கத்தினார். உடனே பெரியாம்பி வித்தியாவின் வாயைப் பொத்தினார். வித்தியாவின் மூக்குக் கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான். பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.

பின்னர் வித்தியாவை வன்புணர்ந்தனர். முதலில் பெரியாம்பியும் (துசாந்த்) பிறகு சந்திரஹாசனும் , தொடர்ந்து செந்தில் (தவக்குமார் ) பிறகு ரவியும் (ஜெயக்குமார்) என மாறி மாறி வன்புணர்ந்தனர். அதனை பெரியாம்பியும் சந்திரஹாசனும் மாறி மாறி காணொலி எடுத்தனர். அவர்கள் பெரிய ‘டச் மொடல்’ போனிலதான் காணொலி எடுத்தனர். அந்த காணொலியை சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும். அவர் அதனை வெளிநாட்டுக்கு கொண்டு போகப் போகிறார் எனப் பேசிக்கொண்டார்கள்.

பின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய (பாழடைந்த வீடு) இடத்தில் இருந்து கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள். அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள். பாடசாலைப் பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.

இவ்வளவு சம்பவமும் ஒன்று , ஒன்றேகால் மணித்தியாலங்களுக்குள் நடைபெற்றது. அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். என சாட்சியம் அளித்தார்.

முஹமட் இப்ரான் சாட்சியம்.

30.06.2017.

ஆறாவது சாட்சியான முகமட் இப்ரான் சாட்சியம் அளிக்கையில்; வவுனியா சிறைச்சாலையில் சுவிஸ் குமார் என்னைச் சந்தித்து, தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? எனக் கேட்டார் நான் ஆம் என்றேன். மென்பொருளைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா ? என திரும்பக் கேட்டார். அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.

சாதாரணமாக, தொலைபேசி பாவிக்கின்றவர்கள், அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதாரணமாகத் தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.

மறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாகச் சந்தித்தபோது , பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன எனக் கேட்டார். அதற்கு நான் அது தெரியாது. உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன். வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று சகோதரர்களும் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு பொல்ிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.

அவ்வாறு செய்தால் பொல்ிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள் எனக் கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

பின்னர் ஒரு நாள் ‘‘நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரைக் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றிக் கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை எனச் சொன்னேன். அவர் ஒரு பெண்ணின் ஒளிப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன்’’ என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார் நான் இலங்கையில் உள்ள எவருடன் தொடர்பு கொண்டீர் எக்ன கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்குக் காட்டி இருந்தார்.

இதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் அதற்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டுச் சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.

வித்தியாவை வன்புணர்வு செய்வதை எடுத்த காணொலியை அலை பேசி ஊடாக சுவிஸ் குமாருக்கு அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அத்துடன் வித்தியாவை வன்புணர்வு செய்த நேரத்தில் நான் அங்கு இருந்து இருந்தால், நான்தான் முதலில் வன்புணர்ந்து இருப்பேன். அவரின் உடலை பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது எனவும் என்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்து இருந்தார் என சாட்சியம் அளித்தார்.

தனுராம் சாட்சியம்.

03.07.2017.

09ஆவது சாட்சியமான , மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளிக்கையில்; நான் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து சின்ன ஆலடிப் பகுதி (மாணவி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதி ) ஊடாகத் தான் பாடசாலைக்குச் செல்வேன்.

சம்பவ தினம் நானும் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனான தனுஜனும் துவிச்சக்கர வண்டியில் சென்றோம். அது தனுஜனின் சைக்கிள். அவன் தான் சைக்கிளை ஓட்டினான்.

செல்லும் போது சின்ன ஆலடிக்கு அருகில் தனுஜனின் செருப்பு கழன்று வீதியில் வீழ்ந்து விட்டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்கிளை நிறுத்தினான். நான் பின்னால் இருந்து இறங்கிச் சென்று செருப்பை எடுத்து வரச் சென்றேன்.

அந்த நேரம் வீதி ஓரமாக அலரி மரங்கள் உள்ள பகுதியில் ரவிமாமா (இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்) மஞ்சள் கலர் ரீ.சேர்ட்டுடன் நின்றார். அப்போது “ம் .. ம் .. “ என சத்தம் கேட்டது. நான் முதலில் பேய் என்று பயந்தேன். ஏனெனில் அந்த வீதியில் சனநடமாட்டம் இருப்பதில்லை. வழமையாக பாடசாலை செல்லும் போது , சின்ன ஆலடிப் பகுதிக்குக் கிட்ட வந்ததும் வேகமாகவே செல்வோம்.

அன்றும் அந்த சத்தத்தை பேய் என்று பயந்தாலும் , அது மாடு கத்தும் சத்தம் போன்று இருந்தது. மன பயம் இருந்ததினால் செருப்பை எடுத்து தனுஜனிடம் கொடுத்ததும் அவன் போட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று விட்டோம்.எனச் சாட்சியம் அளித்தார்.

தனுஜன் சாட்சியம்.

அதனைத் தொடர்ந்து பத்தாவது சாட்சியான இலங்கேஸ்வரன் தனுஜன் சாட்சியம் அளிக்கையில் ,

நானும் தனுராமும் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தோம். எனது சைக்கிளில் நான் தான் அவனைப் பின்னுக்கு ஏற்றிக்கொண்டு சென்றேன்.

சின்ன ஆலடி எனும் பகுதியில் , சைக்கிள் பெடல் கட்டை இல்லாததால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்டது. நான் சைக்கிளை நிறுத்தி , சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்த போது , தனுராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்தான். பின்னர் நாங்கள் செருப்பை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு சென்று விட்டோம். எனச் சாட்சியம் அளித்தான்

பாலசந்திரன் சாட்சியம்.

அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்சியான , பாலசிங்கம் பாலசந்திரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் 13ஆம் திகதி காலை 8.47 மணியளவில் கடைக்குச் சென்ற போது வித்தியா கொலை நடந்த இடத்திற்கு அருகில் , பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.
அதில் ரவி என்று அழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் எனது தங்கையின் கணவன். மற்றையவரான பூபாலசிங்கம் தவக்குமார் , ஜெயக்குமாரின் சகோதரன்.
மறுநாள் 14 ஆம் திகதி தான் வித்தியா இறந்த செய்தி எனக்குத் தெரியும். வித்தியா எனக்கு கிட்டத்து சொந்தமும் கூட , வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு சுமார் 15 அடி தூரத்தில் தான் முதல் நாள் ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.

இலங்கேஸ்வரன் சாட்சியம்

அதனைத். தொடர்ந்து வழக்கின் 07ஆவது சாட்சியமான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில் ,

‘‘நான் வித்தியா வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறேன். 14ஆம் திகதி காலை வித்தியாவின் அம்மாவும் சகோதரனும் , வித்தியாவை நேற்றில் இருந்து காணவில்லை. என தெரிவித்து தேடிப் பார்க்கச் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

வித்தியா பாடசாலை செல்லும் வழியில் உள்ள கிணறுகள் , கேணிகளில் தாய் தேடிக்கொண்டு வந்தார். நான் வீதியோரமாக பற்றைகளுக்குள் தேடி சென்றேன். வித்தியாவின் அண்ணா ஆட்கள் அற்ற வீட்டு பகுதிகளை தேடி சென்றோம். அப்போது திடீரென்று வித்தியாவின் அண்ணா ஐயோ வித்தியா வித்தியா என கத்தினான்.

அந்த இடத்திற்கு நான் சென்றேன். அப்போது வித்தியாவின் அம்மாவும் அங்கு வந்து விட்டார். அவர் உடனே என்னிடம் , வித்தியாவின் சடலம் கிடக்கிறது தொடர்பில் ஊருக்குள் சென்று செல்லுமாறு கூறினார். நான் சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்தேன்.

வித்தியாவை சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்யப்பட்டது 13ஆம் திகதி சடலம் மீட்கப்பட்டது 14 ஆம் திகதி) ஆலடி சந்தியில் கண்டேன்.

அன்றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்கள் வாங்க என ஆலடி சந்தியில் உள்ள கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது வித்தியா பஞ்சாபியுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்.

அந்த நேரம் கடைக்கு எதிரே வீதியின் மறுபுறத்தில் , டொல்பீன் ரக வாகனத்தில் , முன் ஆசனத்தில் (சாரதி ஆசனத்திற்கு அருகில்) 09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு இருந்தார். மற்றைய ஆசனங்களில் 04ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 05ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 08ஆம் எதிரியான கண்ணன் என அழைக்கப்படும் ஜெயதரன் கோகுலன் ஆகியோருடன் மேலும் இருவரும் இருந்தனர். அவர்களை யார் என்று எனக்குத் தெரியாது. மொத்தமாக வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் பஸ்சினால் வந்து இறங்கி சைக்கிளை, எடுத்துகொண்டு சென்று வித்தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தனர்’’ என சாட்சியம் அளித்தார்.

சதானந்தரூபிணி சாட்சியம்.

15 ஆவது சாட்சியான செல்வராசா சதானந்தரூபிணி சாட்சியம் அளிக்கையில் ,

நான் சம்பவ தினமான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது சைக்கிளில் வேலணை பிரதேச செயலகத்திற்குச் சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த வீதியில் ஒரு இடத்தில் உள்ள ஒற்றையடி பாதை ஊடாக , சந்திரஹாசன் சரம் ஒன்றினை மடித்துக்கட்டியவாறு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் போய்க் கொண்டிருந்த தூரம் எனக்கும் அவருக்கும் இடையில் “ தம்பி “ எனக் கூப்பிட்டால் கேட்கும் தூரம் தான் அப்போது இருந்தது.

அவர் சென்ற ஒற்றையடி பாதை ஊடாக சுமார் 200 மீற்றர் தூரம் சென்றால் , வித்தியாவின் சடலம் கிடந்த இடத்துக்குச் செல்ல முடியும். அதற்காக அவர் அங்கு தான் சென்றார் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன்.

பின்னர் மறுநாள் வித்தியாவின் சடலம் கிடக்கின்றது என்ற செய்தி அறிந்து நானும் அயலவர்கள் சுமார் 10 பேரும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றோம்.

அப்போது அந்த இடத்திற்கு சந்திரஹாசனும் வந்திருந்தார். அவர் அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டார்’’ எனச் சாட்சியம் அளித்தார்.

சட்டவைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் சாட்சியம்.

வழக்கின் 23 ஆவது சாட்சியமான சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியமளிக்கையில்;

சடலத்தை அவதானித்த போது , இரண்டு கைகளின் பெருவிரல்களும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு தலையில் பின் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. கால்கள் இரண்டும் 180 பாகைக்கும் அதிகமாக விரித்து கட்டப்பட்டு இருந்தது. கண்கள் வீங்கி இருந்தன. காதின் ஒரு பகுதி மூக்கு போன்ற இடத்தில் இருந்து இரத்த கசிவுகள் காணப்பட்டன. வாய்க்குள் உள்ளாடை திணிக்கப்பட்டு இருந்தது.

மார்பக பகுதியில் இரண்டு முடிகள் காணப்பட்டன அவற்றை தடயவியல் பிரிவினர் சேகரித்துக்கொண்டார்கள். பெண் உறுப்பில் இருந்து வடிந்த ஒட்டும் தன்மை உள்ள திரவத்தை சேகரித்துக் கொண்டேன்.

பின்னர் சடலத்தின் கட்டுக்களை தடயவியல் பிரிவினரின் உதவியுடன் அவிழ்த்தேன் அப்போது சடலத்தின் கழுத்து பகுதியில் பாடசாலை கழுத்துப்பட்டியால் கழுத்து இறுக்கி கட்டப்பட்டு நிலத்தில் இருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அந்தக்கட்டுகளை அவிழ்த்து சடலத்தை திருப்பி பார்த்த போது பிட்ட பகுதியில் காயங்கள் இருந்ததை அவதானித்தேன்.

அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலை க்கு சடலத்தை எடுத்து வந்தோம். அன்றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன்.

சடலத்தில் 8 காயங்களை அவதானித்தேன். எனத் தெரிவித்தார்.


You May Like This Video?

வித்தியா பேசுகிறாள்..