இலங்கைக்கு கொண்டு வரப்படும் யாழ். இளைஞனின் சடலம்

Report Print Vethu Vethu in வாழ்க்கை

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞனின் சடலம் நாளை காலை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ் தீவில் தற்கொலை செய்து கொண்ட ரஜீவ் ராஜேந்திரனின் சடலம் நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை பாப்புவா நியூ கினியா அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நாளைக்கு உடலை பெற்றுக்கொள்ளுமாறு ரஜீவின் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 32 வயதுடைய ரஜீவ், கடந்த 2ஆம் திகதி மனுஸ் தீவில் வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு அவரது குடும்பத்தினர் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தனர்.

மீசாலை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி பகுதியில் வாழும் ரஜீவின் தாயார் வளர்மதி, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு, யாழ்ப்பாணத்தில் உள்ள வெளியுறவு அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகத்தை அணுகியுள்ளார்.

ரஜிவின் 59 வயதுடைய தந்தை சின்னதுரை ராஜேந்திரன் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவராகும். 56 வயதுடைய அவரது தாயார் வளர்மதி 4 பிள்ளைகளின் தாயாராகும் என தெரிவிக்கப்படுகின்றது.

2003ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற ரஜீவ் 2014ஆம் ஆண்டே தனது பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ளார். தான் படகு மூலம் அவுஸ்திரேியாவுக்கு செல்ல முயற்சித்ததாகவும்,, மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைபேசியில் ரஜீவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதென ரஜீவின் தாயார் தெரிவித்துள்ளார்.