முப்பது வருட அநீதி வரலாற்றை மாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி

Report Print Gokulan Gokulan in பாராளுமன்றம்

முப்பது வருட அநீதி வரலாறு இப்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேசசபைகளுக்கு வாக்களிக்க முடியும். ஆனால், பிரதேசசபைகளால், தோட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற சட்ட விதிக்கான திருத்தம் இன்று அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்பித்தார்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேசசபை தேர்தல்களில் வாக்களிக்கலாம்.

பிரதேசசபை உறுப்பினர்களை வாக்களித்து தெரிவு செய்யலாம். பிரதேசசபைகளை உருவாக்கலாம். ஆனால், அவர்களது வாக்குகளால் உருவான பிரதேச சபைகள், தோட்டப்புறங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்ற பாரபட்சமான சட்ட விதி, 1987ஆம் வருடம் முதல் தொடர்ந்து இருந்து வந்ததாகும்.

கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளால் அமைக்கப்பட்ட உடபளாத பிரதேசசபை பல ஆண்டுகளுக்கு முன், பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்தது என்ற குற்றஞ்சாட்டி கலைக்கப்பட்டது.

இந்த முப்பது வருட அநீதி வரலாறு இப்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் துறை அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா இந்த பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்பித்தார்.

அதை அமைச்சரவை ஏக மனதாக ஏற்றுக்கொண்டது. இந்த திருத்த நகல் விதியில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய சில திருத்தங்களை இரண்டாம் வாசிப்பின் போது சேர்த்துக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி தந்தது. இது தொடர்பில் நண்பர் பைசர் முஸ்தபாவுக்கு எம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முப்பது வருட காலமாக மலையகத்தில் நிலவி வந்த இந்த பாரபட்ச கொடுமை திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் குழுவினர் உட்பட பல மலையக புத்திஜீவிகளால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும்.

இது இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் அரசியல் ஆளுமையுடன் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, இன்னொரு முயற்சியின் மூலம் உருவாக இருக்கும் புதிய பிரதேச சபைகளின் பணிகளுக்கு இந்த சட்ட திருத்தம் பேருதவியாக அமையும்.

இதன்மூலம் வெகு விரைவில் மலையகம் ஒளிரும். இதற்கான அடிப்படையையே இன்று நாம் படிப்படியாக உருவாக்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.