International
Notification
Notification
Submit Cancel

வில்பத்து விவகாரத்தில் அசிரத்தை காட்டினால் விளைவுகள் மோசமாகும்! முஸ்லிம்கள் எச்சரிக்கை

வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக பேசித் தீர்க்க ஜனாதிபதி, பிரதமர் இருவரையும் தாமதமின்றி சந்தித்துப் பேச விரும்புவதாக முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கமும் இது விடயத்தில் அவசரம் காட்டாமல் தாமதப் போக்கை கடைப்பிடித்தால் நிலைமை மோசமடையுமெனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு ரேணுகா ஹேட்டலில் இடம்பெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கலந்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் இதனைத் தெரிவித்தனர்.

முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

வடபுலத்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்களாகி விட்டன. யுத்தம் முடிந்த பின்னரும் கூட அவர்களால் தமது சொந்த பூமியில் மீளக் குடியேற முடியவில்லை.

நல்லாட்சி அரசு வந்த பின்னராவது எமது மக்களுக்கு விடிவு கிட்டுமென எதிர்பார்த்தோம்.

வெளியேற்றப்பட்ட, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த பூமியில் அவர்களது காணிகளில் குடியமர்த்தப்படுவரென ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

முஸ்லிம்கள் மீள் குடியேறியுள்ள காணிகளுக்கும் வில்பத்து வனப் பகுதிக்கும் எந்த விதமான தொடர்புகளும் கிடையாது.

இப்பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் தெரிவிக்கும் மருதமடு, வேப்பங்களம், அத்துடன் விழாத்திக்குளம் என்பன முசலி பிரதேச செயலகப் பகுதியிலேயே அமைந்துள்ளன.

இவை எந்த வகையிலும் வில்பத்து வன இலாகாவுக்குள் வர முடியாது.இனவாதத் தரப்புக்களின் பொய்யான தகவல்களை வைத்து ஊடகங்கள் விவகாரத்தை திரிபு படுத்தி வருகின்றன.

சில இலத்திரனியல் ஊடகங்கள் இனவாத சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் புரிகின்றன. என்ன பாவம் செய்ததற்காக இவர்கள் முஸ்லிம்களை வஞ்சிக்கின்றனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்து தேசப்பற்றோடு வாழும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஊடக மாநாடுகளை நடாத்துகின்றோம்.

26 வருடங்களுக்கு முன்னர் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் நடுத் தெரிவில், அகதி முகாம்களில், வீதியோரங்களில் வாழ வேண்டுமா?

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் தலையிடுவது முக்கியமானது.

யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கும் மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட வடபுலத்திலுமிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் தாமதமின்றி நியாயம் கிடைக்க வேண்டும்.

இப்போது வடபுலத்து முஸ்லிம்கள் மிகவும் நொந்து போயுள்ளனர்.

கடந்த ஆட்சியில் நியாயம் கிடைக்குமென எதிர்பார்த்து ஏமாந்தோம்.

பின்னர் மைத்திரி - ரணில் நல்லாட்சியின் மீது அதீத நம்பிக்கை வைத்தோம். அந்த நம்பிக்கையிலும் மண் விழும் போல் தெரிகிறது.

எனவே தான் நாம் ஒன்றுபட்டு ஒரு தீர்மானத்தை எடுப்பதென முடிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்