இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர்வரும் 20ம் திகதியோடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுறுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடைய பதவிக்காலத்தின் போதான இறுதியுரையை அமெரிக்கர்களுக்கானதாக மிக நேர்த்தியான முறையில் ஆற்றியிருக்கிறார்.

அவரின் உரை மிக மிக உருக்கமானதாகவும், அமெரிக்காவின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டதாக அமைந்திருந்தனை அவதானிக்க முடிந்ததுடன் பார்வையாளர்களையும் நெகிழ வைத்துள்ளது.

நேற்றைய தினம் சிகாகோவில் ஒபாமா ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே,

ஆம் நம்மால் முடியும். நாம் செய்துகாட்டியிருக்கிறோம். என்னுடன் கடந்த 8 வருடங்களும் உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

என் சக அமெரிக்கர்களே, உங்களுக்காக பணி செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் மீண்டும் திரும்பியிருக்கிறேன் ஓர் அமெரிக்க குடிமகனாக, மீதமூள்ள நாட்களை உங்களுடன் கழிப்பதற்காக.

அமெரிக்க அதிபராக கடைசியாக உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன், நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

உங்களது கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்லுங்கள்.

அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். எதிர்காலம் சிறந்த கைகளில் இருக்குமென்ற நம்பிக்கை என்னிடத்தில் உள்ளது.

என்னுடன் கடந்த 8 வருடங்களாக பணிபுரிந்த எனது சக பணியாளர்களுக்கு எதிர்காலப் பயணமானது திருமணம், குழந்தைகள் என சிறந்த பயணமாக இருக்கப் போகிறது.

மாலியா, சாஷா( ஒபாமாவின் இரு மகள்கள்) நீங்கள் இருவரும் சிறந்த பெண்கள்.

புத்திசாலிகள், அழகானவர்கள்; அதைக் காட்டிலும் நீங்கள் இருவரும் கனவுகளை உடையவர்கள். உங்கள் தந்தையாக நான் பெருமிதம் கொள்கிறேன்.

மிச்செல் கடந்த 25 வருடங்களாக, எனக்கு மனைவியாகவும், எனது குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் இருக்கவில்லை. எனது சிறந்த தோழியாகவும் இருந்திருக்கிறீர்கள்.

உங்களுக்கான பணியைத் தீர்மானித்தீர்கள். அதற்காக அனுமதி ஏதும் என்னிடம் கேட்கவில்லை. வெள்ளை மாளிகையை அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாக மாற்றினீர்கள்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியாக நீங்கள் என்னை பெருமையடையச் செய்தீர்கள்.

அமெரிக்க மக்களே,

நமது ஜனநாயகத்துக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமல்ல. வாழ்வு முழுவதும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்.

நீங்கள் இணையத்தில் ஆபத்துகளை பேசிப் பேசி சோர்ந்து விட்டீர்கள் என்றால், நிஜத்தில் ஒருவருடனாவது பேச முயற்சி செய்யுங்கள்.

நமது ஜனநாயகம் அழகான பரிசு. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

அமெரிக்க குடிமக்களாகிய நீங்கள் பங்குபெறாமல் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை. நாம்தான் ஜனநாயகத்துக்கான சக்தியைக் கொடுக்கிறோம்.

நாம் தளர்ந்து போகாதவரை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம்மிடம் போட்டி போட முடியாது.

அமெரிக்கர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பெண் வெறுப்பு, நிறவெறி, பாலியல் பாகுபாடு, மதவெறுப்பு போன்றவற்றை மறந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட பல துறைகளில் அமெரிக்கா முன்னேறியுள்ளது.

கடந்த 8 வருடங்களில் தீவிரவாத தாக்குதல் ஏதும் அமெரிக்காவில் நடக்கவில்லை.

தீவிரவாதத்துக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். விரைவில் ஐஎஸ் இயக்கம் அழிக்கப்படும்.

பருவ நிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை காப்பற்றுவதற்கான முயற்சிகளை நாம் முன்னேடுத்துச் செல்ல வேண்டும்.

ஏனெனில் நம் குழந்தைகளுக்கு அதற்கான நேரம் இருக்காது. அவர்கள் அதற்கான விளைவுகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

நான் பதவி ஏற்றபோது அமெரிக்காவில் நிறம் சார்ந்த பேச்சுகள் அதிகளவில் இருந்தது.

நிற வெறி நமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.

கடந்த இருபது வருடங்களுக்கு முன் இருந்த சூழலைக் காட்டிலும் தற்போதைய சூழல் சிறப்பாகத்தான் உள்ளது என நான் தற்போது உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

நீங்கள்தான் என்னை சிறந்த அதிபராக உருவாக்கினீர்கள், நீங்கள்தான் என்னை சிறந்த மனிதராகவும் உருவாக்கினீர்கள்" என அனைவரையும் கண் கலங்க வைத்ததுடன், ஒவ்வொரு அமெரிக்கர்களையும் நெகிழ வைத்தார் ஒபாமா தன்னுடைய உரையின் போது.

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையுடன் 8 வருடம் ஆட்சி புரிந்த ஒபாமாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 20-ம் திகதியுடன் முடிவடைகிறது.

அவருக்கு இலங்கையர்கள் சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Comments