த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்: கஜேந்திரகுமார்

Report Print Thamilin Tholan in அரசியல்
advertisement

தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

நாங்கள் இந்தக் கருத்தை முன்னர் முன்வைத்த போது ஈ.பி.ஆர் எல் எவ் அணி கூட குறித்த கருத்தை நிராகரித்ததுடன் கொச்சைப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை என்ற கருத்தைக் கூறியிருப்பதை நாம் வரவேற்கிறோம்.

தொடர்ந்தும் ஈ.பி.ஆர்.எல் எவ் அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிழையான அணிக்குக் கீழ் இயங்கிக் கொண்டிருக்க முடியாது.

ஆகவே, புதிய தலைமை தமிழ் மக்களுக்குத் தேவையெனில் நீங்கள் பழைய தலைமையை நிராகரிக்க வேண்டும்.

தமிழ்மக்களின் மிக முக்கியமான விடயமான அரசியல் அமைப்பு விடயத்தில் தமிழ்மக்களுக்குத் துரோகமளித்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய தலைமைக்குப் பின்னால் ஒற்றுமை என்ற போலிப் பெயரில் நீங்கள் தொடர்ந்தும் நீடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பொறுப்புக் கூறல் என்ற விடயம் உள்ளக விசாரணைக்குள் முடக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழர்களுடைய பொறுப்புக் கூறல் தமிழர்களுடைய அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் ஐ.நாவில் கால அவகாசத்தைக் கோரியுள்ள சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதற்கும் இணங்கியிருக்கிறது.

தமிழர்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் அரசியல் தீர்வு விடயத்தில் மாத்திரம் கூட்டமைப்புத் துரோகமளிக்கவில்லை. பொறுப்புக் கூறல் என்ற விடயத்திலும் துரோகம் இழைத்துள்ளது.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாடு இனிச் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்மக்கள் பேரவையின் ஒரு அங்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ்மக்கள் பேரவையில் அங்கத்துவத் தரப்பாகவுள்ளது. அவர்கள் கூட்டமைப்பில் தாம் நீடிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது.

பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டமைப்பை விமர்சிக்கும் அவர்கள் மறுபக்கத்தில் தமிழ்மக்கள் பேரவையின் நிலைப்பாடுகளுடனும், கொள்கைகளுடனும் இணங்குவதாகக் காட்டிக் கொள்வது எமது மக்களுக்குக் குழப்பத்தையே உண்டாக்கும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஆகவே, தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தலைமை என்ற விடயத்தை நிராகரித்து ஆணித்தரமான முடிவை எடுத்து நேர்மையான அரசியலைக் கொண்டு செல்வதற்கு முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments