புகலிடக் கோரிக்கையாளர்களின் மனோநிலை! தொடரும் தமிழரின் அவலம்

Report Print Samy in அரசியல்

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமான அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்டவிரோதமாக அங்கு சென்றோர் எதுவித அச்சமுமின்றி தாராளமாக இலங்கைக்குத் திரும்பி வரலாமென்பதே பிரதமர் வெளியிட்ட அந்த அழைப்பு.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்றோர் அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படும் போது, அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவதே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாகும்.

எனினும் அவ்வாறான எதுவித தொந்தரவுகளும் இடம்பெறப் போவதில்லையென்ற உறுதிமொழியை அவுஸ்திரேலியாவில் வைத்து வழங்கியுள்ளார் பிரதமர் ரணில்.

பிரதமர் அங்கு அளித்துள்ள உறுதிமொழியை தாராளமாக நம்ப முடியுமென்பதில் ஐயமில்லை.

ஏனெனில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்வோரால் இரு நாடுகளுக்குமிடையே பெரும் தொந்தரவு நிலவி வருகிறது.

அவுஸ்திரேலியா நோக்கி இவ்வாறு சட்டவிரோதமாகப் புறப்படுவோரைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

ஆகவே அவுஸ்திரேலிய அரசின் வேண்டுகோளின் பேரிலேயே பிரதமர் ரணில் அந்நாட்டில் வைத்து இவ்வாறானதொரு அழைப்பை விடுத்திருப்பாரென்பது புரிகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள் தாய்நாடு திரும்புவதில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனாலும் அந்நாட்டிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பத்தக்க மனோநிலையைக் கொண்டிருப்பார்களா என்பதே இங்கு சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

அவுஸ்திரேலியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளையும் சேர்ந்தோர் உள்ளனர்.

இலங்கையர்களை எடுத்துக் கொண்டால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர் என்று அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு உள்ளனர்.

இவர்களெல்லாம் உண்மையிலேயே அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அல்லர், பொருளாதார அகதிகளென்று இவர்களைக் கூறுவதே மிகவும் பொருத்தம்.

யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு, கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும், படையினரின் கைதுகளுக்கும், புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கும் அஞ்சியதால் பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தது உண்மை.

ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்களாகி விட்டது. யுத்த முடிவுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டவர்கள் உயிருக்கு அஞ்சிப் புறப்பட்டவர்கள் அல்லர்.

பொருளாதார நோக்குடன் உயிரைத் துச்சமென மதித்து, படகுகளை நம்பி பெரும் சமுத்திரத்தையே கடந்து அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தவர்கள் அவர்கள்.

இவர்களது பயணம் சட்டவிரோதமானதாக இருக்கலாம். எனினும் இலங்கையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் நிலவுகின்ற நெருக்கடிகள், சீவனோபாயத்துக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதில் மாற்று வழிகள் இல்லாமை போன்ற காரணங்களாலேயே இவர்கள் உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தனரென்பதை மறுக்க முடியாது.

அங்கு கூடுதல் சம்பளத்தைப் பெறுவதன் மூலம் இங்குள்ள தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைச் சீரமைத்துக் கொள்ளலாமென்பதே அவர்களது கூடுதலான எதிர்பார்ப்பு ஆகும்.

அதேசமயம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதன் மூலம் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது.

இதனாலேயே பெரும் தொகைக் கடனை வாங்கி படகுகள் மூலம் அங்கு தஞ்சமடைந்திருக்கின்றனர்.

பல மாதங்கள் கடந்த போதிலும் ஏராளமானோர் இன்னும் அங்குள்ள முகாம்களிலேயே தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பொன்றை அவர்களுக்கு விடுத்துள்ளார்.

பிரதமரின் பகிரங்கமான அழைப்பு பாராட்டக் கூடியதாக இருந்தாலும், அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவதற்கு சம்மதிப்பார்களா என்பதே இங்கு எழுகின்ற வினா!

உயிரையே துச்சமென மதித்து ஆழ்கடல் கடந்து அங்கு சென்றவர்கள், எவ்வாறான தொழில் வாய்ப்பை நம்பி தாய்நாட்டுக்குத் திரும்பி வருவதற்குச் சம்மதிக்கப் போகின்றார்கள்?

இலங்கையில் தொழில்வாய்ப்பு எதுவும் கிடையாதென அங்கு சென்றோர் மீண்டும் திரும்புவதற்கு ஒருபோதுமே இணங்கப் போவதில்லை.

எனவே பிரதமர் ரணிலின் அழைப்பு எவ்வாறான பிரதிபலனைத் தருமென்பதை அறுதியிட்டுக் கூற முடியாதிருக்கின்றது.

இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள் விருத்தி செய்யப்பட வேண்டுமென்ற அவசியத்தை ‘அவுஸ்திரேலிய சட்டவிரோத புலம் பெயர்வு’ நமக்கெல்லாம் உணர்த்துகின்றது.

அதேசமயம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்ற தமிழர்கள் விடயத்தை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டியிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களாகி விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

வடக்கு , கிழக்கு நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களாக, அங்கு தற்போது நிலவுகின்ற அமைதிச் சூழலை மட்டுமே குறிப்பிட முடியும்.

பறிகொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்வதற்கான போராட்டங்கள் ஆங்காங்கே தொடருகின்றன. காணாமல் போனோர் விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு உறவினர்கள் போராடுகின்றனர்.

அரசியல் கைதிகள் விடுதலை கவனிப்பாரின்றிக் கிடக்கின்றது.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் இன்னும் இழுபறியே தொடருகின்றது.

திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் என்றெல்லாம் வடக்கு, கிழக்கில் இருந்து குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பிரயத்தனம் மேற்கொள்கின்ற போதிலும், தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான சக்திகள் இனவாதத்தைப் பரப்பும் காரியத்தில் ஈடுபடுகின்றன.

எனவே தமிழர்களைப் பொறுத்தவரை இன்னுமே சுமுகமான சூழல் உருவாகவில்லையென்பதே உண்மை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் மனோநிலை எவ்வாறானதாக இருக்கப் போகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

இலங்கையில் மாற்றங்கள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதையே இவ்விடத்தில் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது.

Comments