கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டுமென பாக்கியசோதி ஜெனீவாவில் கோரவுள்ளார்?

Report Print Kamel Kamel in அரசியல்

போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டுமென நல்லிணக்க செயலணியின் செயலாளரும் சிவில் செயற்பாட்டாளருமான பாக்கியசோதி சரவணமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்று கோரவுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் இலங்கையில் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டுமெனவும் அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பாக்கியசோதி சரவணமுத்து கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுக்கவுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களான நிமல்கா பெர்னாண்டோ, சிவச்சந்திரன் சரோஜா மற்றும் பென்சிலா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

புலிகளின் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க இடமளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆபத்தான பரிந்துரைகளை அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணி வெளியிட்டிருந்தது.

இந்த ஆபத்தான பரிந்துரைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் இன்றைய கூட்டம் அமையும் என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரிட்டனின் எம்.ஐ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் ஒருவரான டேவிட் பெங்கலி என்பவரே இந்த கூட்டத்தை வழிநடத்துகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றை, அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுமதியின்றி சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பித்தல் சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments