போராட்டமொன்றில் பங்கேற்க பந்துலவும் ரோஹித்தவும் ஜெனீவா விஜயம்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிரான போராட்டமொன்றில் பங்கேற்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனவும், ரோஹித்த அபே குணவர்தனவும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நோக்கி இவர்கள் இவரும் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பந்துலவும் ரோஹித்தவும் ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதான காரியாலயத்திற்கு எதிரில் எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

உலக இலங்கை அமைப்பு என்ற அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படைவீரர்களுக்கு எதிராகவும் போரை வழிநடத்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அமைப்பின் தலைவர் வசந்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என கோரிக்கை விடுக்கும் வகையில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது மக்களின் வாக்குரிமையை முடக்கி வருவதாகவும் இதனை கண்டிப்பதாகத் தெரிவித்து மகஜர் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் வழங்கப்படவுள்ளது.

உடனடியாக தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நிரூபிக்கும் நோக்கில் 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை ரியர் அடமிரல் சரத் வீரசேகர மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது போர்க்குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச தலையீடு அவசியமற்றது எனக் கூறும் இந்தத் தரப்பினர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரி மகஜர் ஒன்றை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments