ஜெயலலிதா.மரணம் குறித்த விசாரணை! கையை விரித்தது மத்திய அரசு!

Report Print Samy in அரசியல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மாநில அரசுக்குதான் விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்போல்லோ மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக அரசின் விளக்க அறிக்கைகள் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக நீதி விசரணை நடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை களைய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அப்பல்லோ மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி தனது மனுவில் கோரியிருந்தார்.

அந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விபரங்களை மாநில அரசுதான் வழங்க முடியும்.

விசாரணைக் குழு அமைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. விசாரணைக் குழு அமைக்க மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் இந்த வழக்கில் மாநில அரசு குழு அமைக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments