தமிழ் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிய நல்லாட்சி அரசாங்கம்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி 15 ஆம்கிராம் மத்திய விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த

விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் என்.கோகுலன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்,

1960 இற்கு முற்பட்டகாலத்தில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்கள் ஒன்றாகவே மட்டக்களப்பு மாவட்டமாக இருந்தது. இதனைப் பிரித்தெடுத்து அம்பாறை மாவட்டத்தினை உருவாக்கி இருந்தனர்.

அதே போல் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்டு இருந்த வடகிழக்கையும் பிரித்து தமிழர்களிடத்தில் பிரிவினையினை ஏற்படுத்தும் வேலைகளை ஆட்சி பீடத்தில் இருந்த பெரும்பான்மை அரசாங்கம் செய்துகொண்டது.

இன்று நல்லாட்சி மலர்ந்துள்ள வேளை தமிழர் எதிர்பார்த்துள்ள தீர்வுத்திட்டம் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் இருந்துகொண்டுள்ள நிலையில்,

இரண்டுவருடம் கடந்தும் அதற்கான எந்த முன்னெடுப்புக்களும் முன்னெடுக்கப்படாமல் உள்ளமை பெரும் கவலைதரும் விடயமாகவுள்ளது.

இன்று அம்பாறை மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் மூன்றாம் தரப் பிரஜையாக தமிழர்கள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல தமிழர்களின் காணிகள் திட்டமிட்டமுறையில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதனை விரைவில் வழங்கவேண்டும்.

குறிப்பாக நாவிதன்வெளிப்பிரதேசத்தினைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்னர் வேப்பையடி பகுதி முக்கிய கேந்திர நிலையமாக இருந்தது. அங்கு நீர்ப்பாசனத் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்களின் காணிகள் இருந்தது.

அக்காணிகளில் படையினர் தங்கியிருப்பது மட்டுமல்லாது ஏனைய காணிகளில் ஆலயத்திற்கு சிறியதோர் கட்டிடம் அமைப்பதற்கு அதனை வழங்காமல் இருக்கின்றனர்.

திருக்கோவில் பகுதில் உள்ள பாடசாலைக்குச் சொந்தமான காணியிலும் அரச படையினர் தங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றமை உகந்ததல்ல. அக்காணிகளை மக்களின் தேவைகளுக்கு அரச படையினர் விட்டுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் நல்லாட்சி எனும் பதம் பொருத்தமானதாக அமையும் .

கடந்த கால ஆட்சியின்போது இவ்வாறான நிலைமைகள் இருந்தன. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் இந்நிலை ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தும், அது கடந்த அரசாங்கத்தின் தன்மையினைக் காட்டுகிறது.

இந்த நாட்டில் சமாதானமாகவும் சமத்துவமாகவும் எங்களை நாங்களே ஆளக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதனை எதிர்பார்த்தவர்களாக தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் எங்களது உயிரை எவ்வாறு காப்பாற்றுவது என்று தயங்கித் திரிந்தோம். இன்று தமிழ் இனத்தின் அபிவிருத்திகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கு இளைஞர்களின் பங்கும் காலத்தின் தேவைப்பாடாக இருக்கின்றது என்றார்.

Comments