குப்பை மேட்டை பொக்கிஷமாக மாற்றியவர்கள்

Report Print Mawali Analan in அரசியல்

குப்பையை வைத்து இலாபங்கள் தேடிக் கொள்பவர்கள் இருக்கும் காரணத்தினாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர்,

இன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமைக்கு பொறுப்பு கூறவேண்டியது இப்போதைய ஆட்சியே என கூறுகின்றார்கள்.

அப்போது நாங்கள் குப்பைமேட்டினை அகற்றுவதற்கு தயாராக இருந்தோம் ஆனால் அதில் கால தாமதம் ஏற்பட்டுப் போனது.

அதனைத் தொடர்ந்து இப்போதைய அரசு எந்த விதமான அக்கறையும் இந்த விடயத்தில் எடுக்க வில்லை என கூறுகின்றார்கள்.

இப்படியாக பொய்களைக் கூறி ஏமாற்றும் செயலையே செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கடந்த காலத்திலும் இந்தப்பிரச்சினை தொடர்ந்தே வந்தது.

இப்போது கூச்சல் போடுகின்றவர்கள் எவரும் கடந்த காலத்தில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த குப்பைகள் நாற்றம் என்றாலும் அதனை வாசமாக பார்க்கின்றவர்கள் இருக்கின்றார்கள். குப்பையை பொக்கிஷமாக பார்ப்பவர்களினால் தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனை வைத்து அரசியல் இலாபம் தேடியவர்கள் இப்போது பொய்களைப் பரப்பிக் கொண்டு இருக்காமல் தீர்வு ஒன்றினைக் காண ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு நவீன தொழில் நுட்பம் மூலமாக தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

மேலும் இங்கே குப்பை கொட்ட வேண்டாம், அங்கே குப்பை கொட்ட வேண்டாம் என்று போராட்டங்கள் செய்ய வேண்டாம் போராட்டங்கள் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனவும் பாட்டளி சம்பிக தெரிவித்தார்.

Comments