சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் காலி முகத்திடல் மைதானத்தில் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை வித்தியாசமானது.

இந்த மே தினக் கூட்டத்தை முழுமையாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே ஏற்பாடு செய்கின்றது.

இதனால், இந்த மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களினால் பங்கேற்க முடியாது.

எனவே, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் காலி முகத்திடல் கூட்டத்தில் பங்கேற்றால் அது கட்சியை பிளவடைச் செய்யும்.

கட்சியின் மத்திய செயற்குழு அவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டி கட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

Comments