உயிரோடு ஒப்படைத்த என் கணவனை காட்டுங்கள்: கதறி அழுததை பதிவு செய்தேன் என்கிறார் அருட்தந்தை

Report Print Kumar in அரசியல்

எனது கணவனை உயிரோடு ஒரு தடவை காட்டுங்கள் என்று கதறியழுதார். அதனை நான்தான் மொழிபெயர்த்தேன் என சமூக செயற்பாட்டாளரும் காணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவருமான அருட்தந்தை சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது என்றும் மறக்கமுடியாத மனவேதனையினை அளிக்ககூடிய தினமாவுள்ளது.

இறுதி யுத்ததின்போது பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் மேல் ஓடிவந்தேன் என்று ஒருவர் என்னிடம் கூறினார். அந்த வேளையில் நடைபெற்ற மரண ஓலங்களுக்கு அளவேயில்லை. இந்த அவலங்கள் 99வீதமானவை தமிழ் மக்களுக்கே ஏற்பட்டது.

மன்னாரில் இருந்து வடக்கில் இருந்து அடித்து அடித்து கொண்டுசெல்லப்பட்ட மக்கள் குவிக்கப்பட்ட இடமே முள்ளிவாய்க்கால். இதில் காணாமல் போனவர்களின் தொகைவகை தெரியாத நிலையே இருக்கின்றது.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மூன்று ஆண்டுகள் நான் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றினேன். அந்தவேளையில் மக்கள் கூறும் கதைகளைக்கேட்டால் அழுகைவரும்.

ஒரு மனைவி வந்து கூறினார், எனது கணவன் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர். நீங்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சரணடையலாம் உங்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறினீர்கள். அதனை நம்பி எனது கணவனைக் கொண்டுவந்து உயிரோடு கையளித்தேன்.

நான் இன்று கேட்பது ஒன்றுதான் உயிரோடு ஒப்படைத்த எனது கணவனை உயிரோடு ஒரு தடவை காட்டுங்கள் என்றே. அதன் பிறகு புலியென்றால் அவனுக்குரிய தண்டனையை கொடுங்கள் என்று கதறியழுதார். அதனை நான்தான் மொழிபெயர்த்தேன்.

இவ்வாறு எல்லாம் பல வேதனைக்குரிய விடயங்கள் நடைபெற்றுள்ளன. அந்தவேளையில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதனையும் செய்யமுடியாத நிலையிருந்தது. மனைவிமார் தாய்மார் வந்து அழுது கூறிய பல கதைகளை என் காதால் கேட்டேன்.

இவ்வாறான ஒரு அகோரமான நிலையினை எமது மக்கள் அனுபவிக்கநேர்ந்தது. மிகவும் வேதனையான விடயமாகும். நேர்மையான அரசினை செய்யவேண்டும் என ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் கூறுகின்றது. இதற்கான நேர்மையான முடிவினை தமிழ் மக்களுக்கு இவர்கள் வழங்கினாலொழிய தமிழர்களின் கொதிக்கும் உள்ளம் சாந்தியடையாது.

இவ்வாறான சம்பவங்களுக்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டும். பிழைவிட்டால் பிழைவிட்டோம் என்று ஏற்றுக்கொள்வதே மனித பண்பாகும். அதையாவது செய்யவேண்டும். அதனைச்செய்யாது இருந்தால் அது கபட நாடகம் போன்றதாகவே நோக்கவேண்டியுள்ளது.

Comments