அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க. போர்க்கொடி! பின்வரிசை எம்.பிக்கள் ரணிலிடம் முறையீடு

Report Print Rakesh in அரசியல்
advertisement

அமைச்சரவை மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கக்கூடாது எனவும் அவர்கள் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அத்துடன், சில அமைச்சர்களும் இதே கருத்தை கட்சித் தலைவரிடம் முன்வைத்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

எனவே, அமைச்சரவை மாற்றத்துக்குப் பச்சைக்கொடி காட்டினால் கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்படுமா என்பது பற்றி பிரதமர் ரணில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய அரசின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்னரே அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதற்கு அவர் உத்தேசித்திருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பிரகாரம் அது பிற்போடப்பட்டது.

எனினும், இம்முறை மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவார் என ஸ்ரீலங்கா சுசுதந்திரக் கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இம்மாதம் 22,23 ஆம் திகதிகளில் நாட்டில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படும் என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்போது ஐக்கிய தேசியக்கட்சி வசமுள்ள முக்கிய சில அமைச்சுகள் கைமாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவே தென்படுகின்றது.

இந்நிலையில்தான், ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் அமைச்சரவை மாற்றத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதியும், பிரதமரும் அடுத்தவாரத்தில் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளனர். அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய விடயதானங்கள் மற்றும் மறுசீரமைக்கப்படக்கபடலாம் எனவும் தெரியவருகின்றது.

advertisement

Comments