விசாரணைகள் தொடரலாம்! ட்ரம்ப் பதவி இழக்க மாட்டார்! இலங்கையின் நிலைமைகள்!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in அரசியல்
advertisement

யதார்த்தங்கள் உண்மைகளை எழுதுவதன் விளைவு என்பது மிகவும் பாரதூரமானது. சில சந்தர்ப்பங்களில் விசேடமாக நாடுகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், தனிநபர்களுடன் பகைமையையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதுண்டு.

இவற்றிற்கு அஞ்சி உண்மைகளையும் யதார்த்தங்களையும் எழுதுவதை ஒருவர் நிறுத்துவாரானால் அவர் ஓர் கோழைக்கு சமனானவராக சமுதாயத்தில் கணிக்கப்படுவர் என்பது சரித்திரம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஆகையால் உண்மைகளையும் யதார்த்தங்களையும் எழுதுவதற்கு யாரும் ஒருபொழுதும் பின்னிற்கக் கூடாது. இதைத் தான் தமிழ் நாட்டின் பிரபல சினிமா நட்சத்திரமும், முன்னாள் முதலமைச்சருமான திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள், “அச்சம் என்பது மடைமையடா....., ஆறிலும் சாவு, நூறிலும் சாவு........” என ஒர் பாடலையே பாடியுள்ளார்.

என்னை பொறுத்தவரையில் இவ் விடயத்தில் பல அனுபவங்கள் உண்டு. இவற்றை எல்லாம் இங்கு எழுதுவதானால் நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். மிகவும் சுருக்கமாக இரு அனுபவத்தை இங்கு தருகிறேன்.

பிரான்சின் முன்னாள் நிதி அமைச்சரும், உலக வங்கியின் தலைவருமான, திரு டொமினிக் ஸ்ரோஸ்கான், 2011ம் ஆண்டில் உலகம் நன்கு அறிந்த ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்ட வேளையில், பலர் அறியாத சில ஆதாரபூர்வமான உண்மைகள் அடங்கிய ஓர் ஆங்கில கட்டுரையை அதே வருடம் ஆகஸ்ட் மாதம் எழுதியிருந்தேன்.

இக் கட்டுரை பிரபல்யமான ஒர் ஆங்கில பத்திரிகையில் வெளியாகியிருந்தது. துரதிஸ்டவசமாக இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை கண்டு மிகவும் ஆத்திரம் கொண்ட ஓர் நாட்டின் பிரதிநிதி, அப் பத்திரிகையை தொடர்பு கொண்டு தமது கோபத்தை பிரதிபலித்திருந்தார்.

தற்பொழுது அக் கட்டுரையை எந்த இணையதளத்திலும் பார்க்க முடியாது.வேறு ஓர் சந்தர்ப்பத்தில், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்த நபர் ஒருவர், நிர்வாகத்துடன் ஏற்பட்ட சில மனக்கசப்பின் காரணமாக, தனது செயற்பாடுகளை சில காலம் நிறுத்தியிருந்தார்.

பின்னர் தனது செயற்பாட்டை ஆரம்பிக்கும் வேளையில், நிர்வாகத்திற்கு தனது திறமையை நிரூபிப்பதற்காக, கிழக்கு நைஜீரியாவில் தோல்வி கண்ட பாயபராவின் விடுதலைப் போராட்டம் பற்றிய ஓர் நிகழ்ச்சியை தொகுத்து காண்பித்தார்.

முன்பு இப் பாயபராவின் விடுதலைப் போராட்டம் பற்றி அறவே அறிந்திருந்த பலர், 2009ம் ஆண்டு மே மாதம் தோல்வி கண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், நைஜீரியாவில் தோல்வி கண்ட பாயபராவின் போராட்டத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக எண்ணினார்கள். அது உண்மை அல்ல.

அந் நிகழ்சியைப் பார்த்த எனக்கு, அந் நிகழ்ச்சியில் பல உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருப்பதையும், அதில் பல நெளிவு சுழிவுகள் இருப்பதையும் காணக்கூடியதாகவிருந்தது.

அந் நிகழ்ச்சியை தொகுத்த ஊடக நபரை நன்கு தெரிந்திருந்த காரணத்தினால், அவருடன் பாயபரா பற்றிய நிகழ்ச்சியில் காணப்பட்ட உண்மைக்கு புறம்பான தகவல்கள் பற்றியும், சரியான தகவல் எது என்பதை அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து உரையாடியிருந்தேன்.

இச் சம்பவம், அந்த ஊடக நபருக்கு என் மீது பாரிய மனக்கசப்பை உருவாக்கியது.அன்றும் இன்றும் என்றும், என்னால் சமுகமளிக்கப்படும் தொலைக்காட்சி, வானொலி நேரடி நிகழ்வுகளில், அதை முன்னின்று நடத்துபவர் அல்லது கலந்து கொள்பவர் யாரும் பிழையான அல்லது திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வாசகர்களுக்கு கொடுக்க முற்படும் வேளைகளில், யாதர்த்தமான உண்மை தகவல்களை ஆதாரங்களுடன் நேர்மையாகவும் துணிவாகவும் கொடுப்பதே எனது வழமை.

இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி என்றும் கவலை கொண்டது கிடையாது. சுருக்கமாக கூறுவதானால், உண்மைகளை யதார்த்தங்களை யாருடனும் விவாதிப்பதற்கு என்றும் தயங்கியது கிடையாது. பிழையான யதார்த்தம் அற்ற தகவல்களை கொடுக்கும் நிகழ்ச்சிகளில் தோன்ற வேண்டிய அவசியமில்லை. இவை உண்மைக்கும் யாதார்த்திற்கும் ஒருவர் செய்யும் அர்பணிப்பாகும். உண்மைகள் ஒரு பொழுதும் உறங்குவது இல்லை.

விசாரணைகள்

advertisement

தற்பொழுது உலகம் பூராவாகவும் பல ஊடகங்களில் பேசப்படும் பொருள், அமெரிக்க ஜனதிபதி தேர்தல் காலங்களில் திரு டொனால்ட் ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரங்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இறுதியாக ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் மத்திய புலன் விசாரணை ஆணையத்தின் இயக்குனர் திரு ஜேம்ஸ் கோமி என்பவரை திடீரென பதவி நீக்கம் செய்துள்ள காரணத்தினால், ட்ரம்ப்பின் விவகாரங்கள் மிகவும் கடுமையாக சூடுபிடித்துள்ளது.

சில ஊடகங்கள், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி திரு ரிச்சேட் நிக்ஸன், பதவியை ராஜினாமா செய்துள்ளது போன்று, ட்ரம்பும் ஜனதிபதி பதவியை ராஜினாமா செய்யும் நிலை உருவாகலாமென கூறுகின்றனர்.

உயர்பதவி வகிக்கும் ஒருவரை, விசேடமாக நாட்டின் முக்கிய தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதை ஆங்கிலத்தில் (impeachment) இம்பிச்மென்ற் என்று கூறுகிறார்கள். இச் சொற்பதத்திற்கு சரியான தமிழ் பதம் தேட முடியவில்லை. இதை சில தமிழ் அகராதிகள் ‘கண்டன தீர்மானம்’ என கூறுகிறார்கள்.

இவ் வழிமுறையை ஜனாதிபதி ட்ரம்ப் மீது பாவித்து, அவர் தேர்தல் காலங்களில் கையாண்ட தவறான வழிமுறைகளென கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு வழிகள் தேடப்படுகின்றது.

அமெரிக்காவில், இவ் வழி முறை மூலம் ஓர் விசாரணையை ஆரம்பிப்பது என்பது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல.அங்கு இவ் வழிமுறையில் ஓர் விசாரணை ஆரம்பிக்க வேண்டுமானால், அங்கு நடைமுறையில் காணப்படும் அமெரிக்க காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்காவின் காங்கிரஸ் என்பது கீழ் சபை என அழைக்கப்படும் நானூற்று முப்பத்து ஐந்து (435) அங்கத்துவத்தை கொண்ட மக்கள் சபையையும், மேற்சபை என அழைக்கப்படும் நூறு (100) பிரதிநிதிகளை கொண்ட செனற் சபையையும் உள்ளடக்கியது.

உலகில் பல நாடுகளில் காணப்படுவதை போன்று, அமெரிக்காவிலும் 1865ம் ஆண்டு முதல் இரு பெரும் அரசியல் கட்சிகளான – குடியரசுக்கட்சியும், ஜனநாயக கட்சியும் இச் சபைகளில் பிரநிதிகளை கொண்டுள்ளனர். அத்துடன் ஒரு சில சுயேட்சை பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.

வழிமுறைகள்

ஓர் ஜனதிபதி மீது உத்தியோகபூர்வமான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், இதன் முதல் கட்டமாக, கீழ் சபை என அழைக்கப்படும் மக்கள் சபையில் வாக்களிப்பு வெற்றி பெற வேண்டும். மக்கள் சபையில் வாக்களிப்பு வெற்றி கண்டால், மேற்சபை என அழைக்கப்படும் செனற் சபை விசாரணைகளை மேற்கொள்ளும்.

இவ் விசாரணைகளை தொடர்ந்து, ஜனதிபதி அவரது பதவியை இழக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி, செனற் சபையின் மூன்றின் இரண்டு வாக்கு மூலமே முடிவு செய்யப்படும்.

அமெரிக்க சரித்திரத்தை ஆராயும் வேளையில், அங்கு பதவி வகித்த நாற்பத்தைந்து ஜனாதிபதிகளில், இருவர் இன்று வரை உத்தியோகபூர்வமான விசாரணைகளிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும், அதேவேளை ஜனதிபதி ரிச்சேட் நிக்ஸன் மீதான விசாரணைகளிற்கான வாக்கெடுப்பு, மக்கள் சபையில் ஆரம்பமாவதற்கு முன்னரே நிக்ஸன் தனது பதிவியை ராஜினமா செய்துள்ளதையும் காணலாம்.

இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப்பின் சங்கடமான நிலையை, குடியரசு கட்சியை சார்ந்த முன்னாள் ஜனாதிபதி நிக்சஸின் நிலைக்கு ஒப்பிடுவது மிகவும் தவறான விடயமாகும்.

ஜனாதிபதி ரிச்சேட் நிக்சஸின் சர்ச்சைக்குரிய காலத்தில், அமெரிக்க காங்கிரஸின் மக்கள் சபை, செனற் சபை ஆகிய இரு சபைகளிலும் ஜனநாயக கட்சியே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டதாக காணப்பட்டது.

ஆகையால் இரு சபைகளிலும் நிக்ஸன் மீதான வாக்கெடுப்பு நடைபெறுமானால், அவை நிட்சயம் நிறைவேறும் நிலையிருந்தது.

advertisement

ஆனால் தற்போதைய அமெரிக்க காங்கிரஸின் இருசபைகளிலும் ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சியே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஆகையால் ஜனாதிபதி ட்ரம்ப் மீது தற்செயலாக விசாரணைகள் நடைபெறும் கட்டங்கள் ஏற்பட்டாலும், - நாற்பத்தியாறு (46) அங்கத்தவர்களை ஜனநாயக கட்சியினரும், ஐம்பத்தியிரண்டு (52) அங்கத்தவர்களை குடியரசு கட்சியினரும், இரு (2) சுயேட்சை பிரதிநிதிகளை கொண்டுள்ள செனற் சபையில், ட்ரம்ப்பை பதவிலிருந்து விலக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைப்பது மிகவும் கடினமானது.

இன்றுவரை உத்தியோகபூர்வ விசாரணைகளிற்கு ஆளாக்கப்பட்டுள்ள இரு அமெரிக்க ஜனாதிபதிகளின் நிலைகளை நாம் பார்க்கும் வேளையில், செனற் சபை வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கத் தவறியதனால், இருவரும் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்படவில்லை என்பதை நாம் அவதானிக்க முடிகிறது.

1865ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவ்வேளையில் பிரதி ஜனாதிபதியாக கடமையாற்றிய திரு அன்ரூ ஜோன்சன் ஜனாதிபதியானர்.

துரதிஸ்டவசமாக, அன்ரூ ஜோன்சன் மீது 1868ம் ஆண்டு உத்தியோகபூர்வமான விசாரணைகள் இடம்பெற்றன. ஆனால் அவர் மீதான விசாரணைகளை அடுத்து, செனற்சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கிற்கு, ஒரு வாக்கு குறைவான காரணத்தினால், ஜனாதிபதி அன்ரூ ஜோன்சன் அன்று பதவி விலக வேண்டிய நிலை ஏற்படவில்லை.

இதேபோல், ஜனநாயக கட்சியை சார்ந்த முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் மீது 1999ம் ஆண்டு இடம்பெற்ற விசாரணைகளை ஆராயுமிடத்து, அவ்வேளையில் அமெரிக்க காங்கிரஸின் மக்கள் சபை, செனற் சபை ஆகிய இரு சபைகளிலும் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையை கொண்டிருந்த பொழுதிலும், செனற்சபையில் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறுமளவிற்கு குடியரசுக் கட்சியினர் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

இதன் கரணமாக ஜனதிபதி கிளின்ரன் தனது பதவிகாலம் நிறைவாகும் வரை சேவை செய்தார்.எது என்னவானலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்துள்ள அதேவேளை, இவற்றை “அமெரிக்க வரலாற்றில், ஒரு அரசியல்வாதி மீதான மிக பெரிய சூனிய வேட்டை” என விமர்சித்துள்ளார்.

சிறிலங்காவின் நிலைமைகள்

இந் நிலையில், சிறிலங்காவின் நிலைமைகள் மிகவும் வேடிக்கையாக காணப்படுகிறது. சிறிலங்காவில் தேர்தல் காலங்களில், விசேடமாக ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில், என்றும் வாக்கு மோசடிகளும் வன்முறைகளும் நிறைந்து காணப்படுவது வழமை.

இச் சம்பவங்கள், ஜனாதிபதி பதவி வகிப்பவரின் கட்சி மீதான குற்றச்சாட்டாக காணப்பட்டால், அவற்றை சுதந்திரமான முறையில் நடவடிக்கை எடுத்து விசாரித்து தண்டனை கொடுக்கும் வழக்கம் சிறிலங்காவில் இல்லை.

இறுதியாக நடைபெற்ற இரு ஜனாதிபதி தேர்தல்களை நாம் கவனத்தில் கொள்ளும் இடத்தில், 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனதிபதி தேர்தலின் பொழுது - பல வாக்கு சாவடிகளில் வாக்கு மோசடிகளும், வன்முறைகளும் காணப்பட்டதாகவும், வாக்குகள் எண்ணும் வேளையில் பல கபடமான நிகழ்வுகள் காணப்பட்டதாகவும், சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பாளர்களினால் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவை யாவும் அலட்சியம் செய்யப்பட்டது என்பதை யாவரும் அறிவார்கள்.

இதேபோல் இறுதியாக நடைபெற்ற 2015 ஜனதிபதி தேர்தலில், தோல்வி கண்ட முன்னணி வேட்பாளர், வெளிநாட்டு தலையீட்டினாலேயே தான் தேர்தலில் தோல்வி கண்டதாக ஊடகங்களிற்கு கூறியிருந்தார். இக் குற்றச்சாட்டுகளை யாரும் ஒர் சுதந்திரமான விசாரணை மூலம் விசாரித்தார்களா? நிட்சயம் இல்லை.

அப்படியானால், ஜனநாயக நாடு என கூறப்படும் சிறிலங்காவில், நீதி நியாயங்கள் அறவே இல்லாது காணப்படுவதற்கு யார் காரணம்?

சிலர் சிறிலங்காவின் நீதி பரிபாலன கட்டமைப்பை குறை கூறும் அதேவேளை, பலர் அரசியல்வாதிகளை குறை கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் உருவாகுவதற்கு காரணமான மக்கள், வீதிகளிற்கு வந்து நீதி நியாயத்தை கேட்பார்களேயானால், அங்கு நிட்சயம் நீதி கிடைக்கும் என்பதை, உலகில் மன்னர்களும் சர்வாதிகாரிகளும் ஆட்சி செய்த நாடுகளின் மக்கள் போராட்டங்கள் நிரூபித்துள்ளன.

சிறிலங்காவில் நீதியையும் நியாயத்தையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியாத அரசியல்வாதிகள், பேச்சளவில், தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடு சிறிலங்கா என மேடைகளில் முழக்குவதை நாம் காணலாம்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 04 Jun 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

advertisement