விக்னேஸ்வரனுக்கு எதிராக கடிதம்: வடக்கு ஆளுநரைச் சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் மாகாண சபை உறுப்பினர்கள் 22பேர் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இன்று இரவு ஆளுநரைச் சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் 16பேரும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் 6பேர் என 22 பேர் ஆளுநரைச் சந்தித்து தங்களது கடிதத்தினை கையளித்துள்ளனர்.

முன்னதாக வடக்கில் இடம் பெற்ற ஊழல் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில், பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர்கள் பதவி விலகவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்றும், மற்றைய இருவரும் மீள் விசாரணை நடத்தப்படும் வரை அவர்கள் விடுப்பில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எனினும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு அதிருப்தி வெளியிட்டுள்ள 22பேரும் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று இரவு திடீரென 22 மாகாண சபை உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன் போது எதிர்க் கட்சித் தலைவர் தவராசா கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இவர்களின் சந்திப்பிற்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளுநரை எதிர்க் கட்சித் தலைவர் தவராசா சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் எடுத்துள்ள முடிவு சரியானது.

வடமாகாண சபையின் ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படு என வடமாகாண முதலமைச்சர் கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம் என எதிர்க் கட்சித் தலைவர் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.