எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனின் சமரச முயற்சி வெற்றி பெறுமா?

Report Print Samy in அரசியல்
advertisement

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை சமரச முயற்சிகளுடன் சுமுகமாக்குவதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான சமரசப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நீண்டநேர தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக நிலைமையை ஏற்படுத்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் மத்தியஸ்த முயற்சிகளில் இறங்கியிருந்தார்.

நேற்று முற்பகல் 11 மணியிலிருந்து சுமார் ஒரு மணித்தியாலம் சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் தொலைபேசி உரை யாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரண்டு மாகாணசபை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ஒரு மாதகால விடுமுறையை ரத்துச் செய்யுமாறு சம்பந்தன் கோரியுள்ளார்.

இரு அமைச்சர்களும் உரிய உத்தரவாதங்களை வழங்கினால் ஒரு மாதகால விடுமுறை என்ற விடயத்தை மாத்திரம் ரத்துச் செய்ய முடியும். எனினும், மக்களுக்கு சேவை செய்ய வந்தவன் என்ற வகையில் விசாரணைகளை நடத்தும் செயற்பாடு இடைநிறுத்தப்படாது என தான் பதிலளித்திருந்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 21 உறுப்பினர்களின் பெயருடன் நேற்று முன்தினம் இரவு, அவசர அவசரமாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது.முதல்வருக்கு ஆதரவான அணி மற்றும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான அணி என இரு அணிகள் உருவாகியதுடன் அரசியல் குழப்ப நிலையொன்று தோன்றியது.

நேற்றுக் காலை முதல் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியே கூடி இதுபற்றி ஆராய்ந்ததுடன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்ந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக இரா.சம்பந்தனும் நேற்று மாலை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி என்பன தனித்தனியான ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரை அகற்றும் முயற்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தனர்.

விக்கி நன்றி தெரிவிப்பு

முதலமைச்சரை நீக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், பொது அமைப்புக்கள், ஆசிரியர்கள் என பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்பட்டதுடன், இன்று (16) வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு வடமாகாண சபைக்கு முன்னால் முதலமைச்சருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வருமாறு சமூக வலைத்தளங்களில் அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தன.

advertisement

இதற்கான அழைப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன. இவர்கள் வடமாகாணசபைக்கு முன்னாலும், பின்னர் முதலமைச்சரின் அலுவலகத்துக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மக்கள் முதல்வரை பலப்படுத்துவோம்', 'தமிழர் அரசை கவிழ்க்க முயலும் தமிழரசு' உள்ளிட்ட கோசங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள் மத்தியில் தோன்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்மீது மக்கள் கொண்டிருக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், பதவியில் இருந்தாலும், நீக்கப்பட்டாலும் மக்களுடன் இருந்து தனது சேவையைத் தொடர்வேன் என உறுதிமொழி வழங்கினார்.

ஊழலைப் பற்றி சிந்திக்கும் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி எவரும் யோசிப்பதில்லை. தமக்கு வரும் வருமானத்தைப் பற்றியே யோசிக்கின்றனர். அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய தாற்பரியம் அவர்களுக்கு விளங்குவதில்லை.

ஊழல் எங்கிருந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பலர் விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்துக்கு மாறாக மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுப்பது என் பொறுப்பு.

இதற்காக நான் எடுத்த நடவடிக்கை எனக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் ஏற்பட்டது. எனினும், மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் இந்தப் பயத்துக்கு இனி இடமே இல்லை.

உங்களுடைய அன்புதான் எனக்கிருக்கும் பலம். நான் எனக்கென்று அரசியல் ரீதியான பலத்தை சேர்த்து வைக்கவில்லை. பொது மக்களுக்கு செய்யும் சேவையே எனக்கிருக்கும் பலம்" என நெகிழ்வுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கின்றோம். நீங்கள்தான் எமது அடுத்த தலைவர் என அங்கு கூடியிருந்த மாணவர்கள் கோஷமெழுப்பினர்.

இது இவ்விதமிருக்க, ஆளுநர் அலுவலகம், தமிழரசுக் கட்சி, முதலமைச்சர் அலுவலகம் என பல்வேறு இடங்களிலும் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, ஆளுநரை நேரில் சென்று சந்தித்திருந்தார். இவ்விடயத்தில் தான் நடுநிலை வகிப்பதாகவும், ஏதாவது ஒரு தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் தான் தனது முடிவை அறிவிப்பதாக அவர் கூறினார்.

நேற்று முன்தினம் முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளுநரிடம் நம்பிக்கையில்லா யோசனையை கையளித்திருந்தனர்.

இந்த யோசனையில் 21 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறப்பட்டது. எனினும், உறுப்பினர்கள் எவரும் அதில் கைச்சாத்திட்டிருக்கவில்லையென்றும், வெறுமனே பெயர்கள் மாத்திரம் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

அது மாத்திரமன்றி 16 உறுப்பினர்கள் மாத்திரமே தமது ஆதரவை உறுதிப்படுத்தியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான காரணம் குறிப்பிடப்படவில்லையென்பதால் அதனை குறிப்பிட்டு வழங்குமாறு ஆளுநர் முன்னரே கூறியிருந்தார்.

மறுபக்கத்தில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள், அவருடைய வீட்டில் சென்று சந்தித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக 16 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

advertisement

இவ்வாறான பின்னணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பநிலையை சுமுகமாக தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இருந்த போதும், முதலமைச்சரை நீக்கும் முயற்சிகளுக்கு எதிராக வடக்கின் பல்வேறு பகுதிகளில் ஹர்த்தால் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

advertisement