இளஞ்செழியனின் தீர்ப்புக்கு தென்னிலங்கையில் வந்த சோதனை! களத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி

Report Print Dias Dias in அரசியல்
advertisement

யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு செய்யும் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்வதற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 2009ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட கனகரட்னம் ஆதித்தனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இவ் வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கடும் ஆட்சேபனையை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா முன்வைத்துள்ளார்.

கனகரெட்னம் ஆதித்தனால் சுய விருப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அரச சாட்சியமாக கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் ஒரு வழக்குமாக மூன்று வழக்குகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மூன்று வழக்குகளிலும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோன்று கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலி மொகமட் என்பவரின் மரணத்தை விளைவிப்பதற்கு உடந்தையாய் செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் 1995ம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் இணைந்து கிளிநொச்சியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டுப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது அரச சட்டத்தரணியால் அரசதரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயமாக வழங்கப்படவில்லையென யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 29-07-2015ல் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தார்.

மீண்டும் இந்த வழக்கு மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் வழக்கைத் தொடர்ந்து நடாத்த வேறு சாட்சியங்கள் இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதையடுத்து எதிரி 17-09-2015ல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சான்றாகக் கொண்டு நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு மேல் நீதிமன்றம், அரச தரப்பு சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாக ஏற்க மறுத்து எதிரியை விடுதலை செய்திருந்தால், மற்றைய மேல் நீதிமன்றங்களில் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெறுவதே 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறையாக இருந்தது.

ஆனால் சட்டமா அதிபர் இந்த நீதிமன்றில் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளையும் மீளப் பெறாமல் அரச சட்டத்தரணி யாழப்பாண மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மீண்டும் இந்த வழக்கில் உண்மை விளம்பல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கையை முன்வைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு முதல் வழக்காக 1982ம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நான் கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜராகியதிலிருந்து இன்று வரை கடந்த 35 ஆண்டுகளாக அரசியல் கைதிகளுக்காக ஆயிரக்கணக்கான வழக்குகளில ஆஜராகியுள்ளேன்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரச தரப்பு அதிருப்தியடைந்திருந்தால் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவையோ அல்லது மேன்முறையீட்டையோ தாக்கல் செய்யவேண்டும். ஆனால் யாழப்பாண மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நடாத்த யாழப்பாண மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர வேறு எந்தச் சான்றுமில்லையென்பதை அரச சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் ஏற்றுக்கொண்டது.

எனினும் யாழப்பாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாதெனவும் இந்த வழக்கை இந் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் தனது வாதத்தில் குறிப்பிட்ட போது சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கும் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர்அலி மொகமட் என்பவரின் மரணத்தை விளைவிப்பதற்கு உடந்தையாய் செயல்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மிகவும் பாரதுரமான வழக்குகள் என்பதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நாட்டின் அரசியலமைப்பின்படி சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதற்கான வரைவிலக்கணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என தனது வாதத்தில் தெரிவித்த பொழுது மேல் நீதிமன்ற நீதிபதி சட்டமா அதிபர் வழக்கை மீளப் பெறவில்லையெனில் வழக்கை நடாத்த வேண்டும் என ஆடி மாதம் 4ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இவ்வழக்கு எதிர்வரும் 4ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement