உங்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகின்றது! சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் தங்கள் சம்பளத்தை பெற்றுக்கொள்ளவும், அரச வாகனங்களை பயன்படுத்துவதற்கும் உரிமை உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குறித்த இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இந்நிலையில், அமைச்சர்கள் இருவர் தொடர்பில் உத்தரவாதம் வழங்குவதற்கான உங்களது இயலாமையை புரிந்துகொள்கின்றேன்.

எனினும், அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்கியமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக" அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் தொடர்பில் உத்தரவாதம் ஒன்றை நிச்சயம் தரப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்கியிடமிருந்து பச்சைக்கொடி: அரசியல் சர்ச்சைக்கு முடிவு கிடைக்குமா?

வட மாகாண அரசியலில் சர்ச்சை நீடித்துவரும் நிலையில், அமைச்சர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு விடுத்த நிபந்தனையை தொடர்ந்தும் வலியுறுத்தப் போவதில்லை என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் விக்னேஸ்வரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்தவும், அந்த விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த இரு அமைச்சர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

விசாரணையின்போது சாட்சியங்கள் அச்சுறுத்தப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், குறித்த அமைச்சர்கள் அச்சுறுத்தவோ, விசாரணைகளில் குறுக்கிடவோ கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்துவதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, குறித்த இரண்டு அமைச்சர்களின் கட்டாய விடுமுறை என்ற விடயத்தை தாம் வலியுறுத்தாது விடுவதாக, சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை குற்றவாளிகளாக இணங்காணாதிருந்த நிலையில்,

அவர்கள் இருவரும் விடுமுறையில் செல்லவேண்டும் என முதலமைச்சர் வழங்கிய அறிவிப்புக்கே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

குறித்த முடிவிலிருந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வாங்கியுள்ள நிலையில், வடக்கில் நீடிக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், சமூக ஆதரவளார்களிடையேயும் ஏற்பட்டுள்ளது.

மேலதிக செய்தி - அஜித்