அமைச்சுப் பதவியைத் திரும்பப் பெறுவது எனது நோக்கமல்ல : ஐங்கரநேசன்

Report Print Thamilin Tholan in அரசியல்

திட்டமிடப்பட்ட ரீதியில் தங்களுடைய சுயநினைவற்ற நிலையில் எனக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை தவறானது.

அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு . இது நிச்சயமாக எனது அமைச்சுப் பதவியைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியல்ல என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (19) முற்பகல் யாழ்.திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ளேன். இது நிச்சயமாக எனது அமைச்சுப் பதவியைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியல்ல.

அந்த நோக்கம் கருதி நான் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. எங்களுடைய மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய வேலைத் திட்டங்கள் எந்த வகையிலும் எதிர்காலத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இவ்வாறான பிழையான தீர்ப்புக்களை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது என்பதற்காகவே நான் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது.

விசாரணை அறிக்கையில் நான் சொல்லாத பல விடயங்களை சொல்லியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நான் சொல்லிய பல விடயங்களை அவர்கள் தங்கள் விசாரணை அறிக்கையில் சேர்க்கவில்லை. உண்மைக்கு மாறான பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன .

இது தொடர்பாகவே நான் எனது தன்னிலை விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். விசாரணைக்குழுவினர் கொள்கை ரீதியாக நான் எடுத்துள்ள சில முடிவுகளைத் தவறெனத் தெரிவித்திருக்கிறார்கள்.

உதாரணமாக ஏற்று நீர்ப் பாசனம் பிழையானது. ஏற்கனவே தோல்வி கண்டதொரு திட்டமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நீர்ப்பாசனத் திணைக்களம் சூரிய மின் சக்தியில் இயங்கக் கூடிய பாரிய ஏற்று நீர்ப்பாசனத் திட்டமொன்றைத் தற்போது திருவையாறில் முன்னெடுத்திருக்கிறது.

விசாரணை அறிக்கையில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் பிழையானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி விவசாய அமைச்சருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் நீங்கள் இந்தத் திட்டத்தை செயற்படுத்துகிறீர்கள் என்று தெரிவித்து யாராவது ஒருவர் தனிப்பட்ட ரீதியில் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டியதொரு சூழல் உருவாகும்.

ஏற்கனவே தோல்வியடைந்த பார்த்தீனிய ஒழிப்புச் செயற்திட்டத்தை நான் ஆரம்பித்தது தவறு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் நிச்சயமாகத் திணைக்களம் அதனை அழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

யாராவது ஒருவர் விஷமத்தனமாக இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையைக் காட்டி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டால் அந்த முயற்சி தடைப்படுத்தப்படும்.

விசாரணைக்குழுவின் அறிக்கையில் பத்துக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அனைத்து வகையான நிதி மோசடிக்குற்றச் சாட்டுக்களிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.

மாகாணக் கணக்காய்வு அறிக்கையைப் பார்வையிட முடியும். மத்திய அரசாங்கத்தின் கணக்காய்வு அறிக்கையைக் கோரிப் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்த அறிக்கைகளை அவ்வாறு தாங்கள் பெற்றுப் பார்வையிட்டால் சிலவேளை ஐங்கரநேசன் நிரபராதி என்று கூறி விடுவிக்கப்படக் கூடிய சூழல் வந்து விடுமோ?

என்பதற்காக அந்த அறிக்கைகள் எதனையும் பார்வையிடாமல் இவ்வாறானதொரு தீர்ப்பை அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

ஐங்கரநேசன் தனக்கு அதிகாரமில்லாத விடயங்களில் மூக்கை நுழைகிறார். தலையை நீட்டுகிறார்... என்பது தான் அவர்களுடைய குற்றச்சாட்டாகவுள்ளது.

வெறுமனே சுற்றுநிருபங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வடமாகாண சபையில் ஆட்சி நடைபெற்றால் எங்களுக்கு மாகாண சபையென்றதொரு அலகே தேவையில்லை.

மாகாண சபை அமைவதற்கு முன்னர் நிர்வாகிகளுடையதும், திணைக்களத் தலைவர்களுடையதும் நிர்வாக ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நிர்வாகம் அல்லது ஆட்சியே போதுமானதாக இருந்திருக்க முடியும்.

மாகாண சபையின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் பொதுவான ஒருங்கு நிரலிலிருக்கக் கூடிய சுற்றுச் சூழல் சார்ந்த விடயங்களில் மாகாண சபைக்கு அதிகாரமில்லை என எங்கேயும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இவர்கள் வலிந்து மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கின்ற, தாரை வார்த்துக் கொடுக்கின்ற அதிகாரிகளின் மனோநிலையில் தான் இந்தத் தீர்ப்பை எழுதியுள்ளனர்.

ஆகவே, சுற்றுச் சூழலைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடம் காணப்படுகிறது. சில விடயங்களில் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு நாங்கள் தடையாகவிருக்கிறோம் என்ற காரணத்தால் இந்தச் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற பதவி வடமாகாண சபைக்குச் செல்லாது எனவே அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நான் அல்ல இனி எந்தவொருவரும் சுற்றுச் சூழல் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றால் மண் அகழ்வது, கல்லெடுப்பது அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்படையக் கூடிய எந்தவிடயங்களையோ முன்னெடுத்தாலும் கூட இங்கே சுற்றுச் சூழல் அமைச்சருக்கு அதிகாரமில்லை, நாங்கள் நினைத்தது போன்று அனைத்தையும்

கொள்ளையடித்துக் கொண்டு செல்வோம் எனும் நிலைமையை ஏற்படுத்தக் கூடியதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஆகவே, இது தொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவையிருக்கிறது.

என்னை அகற்றுவதற்கான பிரதான காரணம் முதலமைச்சருடைய ஒரு கையை வெட்டி விடுவதன் மூலம் அவரை விழுத்தலாம் என ஏற்கனவே விந்தன் கனகரத்தினம் தனது அறிக்கையூடாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதனை ஓரளவுக்கு நான் ஏற்றுக் கொண்டாலும் கூட அவர்களுடைய பிரதான இலக்கு என்பது எதற்கும் சோரம் போகாமல் விடாப்பிடியாகச் சுற்றுச் சூழல் சார்ந்து செயற்பட்டு வரும் ஒரு அமைச்சர் தொடர்ந்தும் இப்பதவியில் நீடிக்கக் கூடாது என்பதனையே பேரினவாத அரசு விரும்புகிறது.

நிதிக்குற்றச்சாட்டு, இலஞ்சம், மோசடி எதுவும் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை தெளிவாகச் சொல்லிய பின்னரும் நிதிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர் என என்னை சுமந்திரன் குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு மாறானதும், அவருடைய சட்ட நீதியைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அவர் மாத்திரமல்லாமல் சம்பந்தனுக்கு வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் அனுப்பி வைத்துள்ளதொரு கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூட நிதிக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஐங்கரநேசனின் ஆதரவை முதலமைச்சர் தக்க வைக்க வேண்டிய நிலையிலுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயமாக அவருடைய குற்றச்சாட்டையும் நான் மறுதலளிக்கின்றேன்.

என்னுடைய தன்னிலை விளக்கம் முழுமையாக ஊடகங்களில் வெளிவந்தன் பின்னர் விசாரணைக்குழுவின் அறிக்கை பிழையானது எனும் நிலைப்பாட்டிற்கே பொதுசன அபிப்பிராயம் சென்றிருக்கிறது.

இவ்வாறான நிலையில் யாராவது இனிமேல் தங்களுடைய உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் விவசாய அமைச்சர் நிதி மோசடிக்குற்றச்சாட்டிற்கு ஆளானவர், நிரூபிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்டால் நிச்சயமாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.