தமிழர்களின் ஒற்றுமையை குழப்பி ஆதாயம் தேடும் முயற்சியில் இனவாதிகள்!

Report Print Kaviyan in அரசியல்

தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என கிளிநொச்சி மாவட்டக் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தேசிய உணர்வாளர்களை 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் சூழ்நிலை, புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றும் போதே ப.குமாரசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன, இவ்விடயத்தில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது எமது விடுதலைக்கான எமது இலட்சியப் பயணத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும்.

எமது தமிழினத்தின் விடுதலைக்காகப் பயணிக்கின்ற போது பல வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை எங்களுடைய வரலாற்றினூடாக நாம் கற்றுள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளாத இனவாதிகளாலும் அதனைக் குழப்புவதால் தாம் எந்தளவு ஆதாயமடையலாம் என்ற தீய நோக்கம் கொண்ட எம் மத்தியில் வாழும் சில அரசியல் குழுக்களும் அதனைக் குழப்பி வந்துள்ளதை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம்.

அதே செயற்பாடுகள்தான் தற்போதும் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்கள் ஆணை கிடைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது காலத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவா.

அவரது காலத்தில் தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வுத்திட்டம் வழங்கப்படும் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.

இந்நிலையில் எமது மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சிதறடித்து மக்களைக் குழப்பி தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் குறுகிய சிந்தனைகொண்ட சுயலாப அரசியல் நடாத்தும் குழுக்களால் நடைபெற்று வருகின்றன.

இப்படியான சதித்திட்டங்கள் எமது பிரதேசங்களில் தற்போது மிகவும் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன. இவ்விடயத்தில் எமது மக்கள் தெளிவான நிலையிலுள்ளார்கள்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசியல் வறுமைக்குள்ளும், வெறுமைக்குள்ளும் வாழும் அரசியல் குழுக்கள் சிலவற்றின் இப்படியான சதித்திட்டங்களால் எமது மக்களது ஒற்றுமையைக் குழப்பி தமிழர்களது பலத்தை சிதைத்து அழித்துவிட முடியாது என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர் க.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பெண்கள் அணித்தலைவி பிரபாமணி, பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.