மலையக மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை கதைக்கவில்லை: சிறீதரன்

Report Print Kaviyan in அரசியல்

எந்தவொரு ஊடகத்திற்கோ ஊடகவியலாளருக்கோ மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளைத் தான் கதைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக சிலரது முகப்புத்தகங்களிலும் அவர்களோடு இணைந்தவர்களது இணையத்தளங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் கதைத்தார் என்ற தகவல் பரப்பப்பட்டு மக்களைக் குழப்புவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம்(15) கிளிநொச்சி யூனியன்குளம் பகுதி மக்களைச் சந்தித்து மக்களது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய வேளை சிலரால் மலையக மக்களை இழிவாகக் கதைத்ததாக சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து தங்கள் கருத்து என்ன என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்டபோது,

நான் எந்தவொரு ஊடகத்துக்கோ, ஊடகவியலாளருக்கோ மலையக மக்களை இழிவுபடுத்திக் கதைக்கவுமில்லை, செவ்வி எதனையும் வழங்கவுமில்லை.

கிளிநொச்சியில் வாழும் மக்கள் அனைவரும் கிளிநொச்சியார் என்ற அடையாளத்துடனேயே வாழ்கின்றோம். இங்கு ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம்.

இங்கு வாழும் நாம் அனைவரும் கிளிநொச்சி மக்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை கொள்கின்றோம். இங்கு வாழும் மக்களை மலையகத்தார், நெடுந்தீவார், வடமராட்சியார், யாழ்ப்பாணத்தார், தீவார், வன்னியார் என எவரும் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பதை எவரும் விரும்புவதுமில்லை.

ஏனெனில் நாம் அனைவரும் கிளிநொச்சி வாழ் மக்கள். நான் மலையக மக்களை இழிவுபடுத்திக் கூறியதாகக் கூறப்படுவது பற்றி எந்த ஊடகத்திற்கு எந்த ஊடகவியலாளருக்கு அப்படிச் செவ்வியளித்தேன் என்பதை முன்வந்து உரிய ஆதாரங்களுடன் அவர்கள் கூறுவார்களானால் நான் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே விட்டிட்டுப் போறன்.

நான் அப்படி இழிவுபடுத்தும் வகையில் எவரிடமும் கூறவில்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட புனையப்பட்ட கதை. இதனால் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சிலர் நன்மையடையத் துடிக்கின்றார்கள்.

கிளிநொச்சியில் வாழும் மக்களிடையே குழப்பங்களைத் தோற்றுவித்து ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகவும் அதன் மூலம் நன்மையடைவதற்காகவும் இப்போது கிளிநொச்சியில் சிலர் முயற்சித்து வருகின்றார்கள்.

இங்கு சாதிப் பிரிவினையோ சமூகப் பிரிவினையோ எவரும் பார்ப்பதில்லை. இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றோம். இந்நிலையில் கிளிநொச்சியில் மக்களை இழிவுபடுத்தும் வகையில் தலித் இயக்கம் என்ற ஒன்றை தோற்றுவித்து அதனூடாக மக்களைக் குழப்பும் வகையிலான அறிக்கைகள் விடப்பட்டமையும் அனைவரும் அறிந்த விடயம்.

இங்கு தலித்துக்கள் என்று யாரும் உள்ளார்களா? ஏன் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தோற்றுவிக்க முயல்கின்றார்கள்? கிளிநொச்சியில் மக்களால் நிராகரிக்கப்பட்ட சந்திரகுமாருக்கும் அவரது கூட்டத்தினருக்கும் இப்படியான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்து மக்களைக் குழப்பி தமது இலக்கை அடைந்துவிட வேண்டும் என்பதில் துடியாய்த் துடிக்கின்றார்கள்.

கிளிநொச்சியில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் நாம் அமைதியாகக் கூட்டம் நடாத்திய போது மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் எமது அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். நொச்சியாகமவில் எனது வாகனத்தின் மீது கைக்குண்டு வீசியும் சுட்டும் என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.

எனது அலுவலகத்திற்குள் புகுந்து வெடிமருந்தை வைத்துவிட்டு அங்கிருந்த இருவரைப் பிடித்துச் சென்று ஒருவருட காலமாகச் சிறையில் அடைத்து வைத்திருந்து விட்டு குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் நீங்கள் அறிவீர்கள்.

அண்மையில்கூட எனது பாராளுமன்றக் கடிதத் தலைப்பையும் எனது பாராளுமன்றப் பதவி முத்திரையையும் தவறான முறையில் பயன்படுத்தி நான் வடமாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியது போல எழுதி தவறான செய்திகள் பரப்பி மக்களைக் குழப்ப முயன்றார்கள். இதிலிருந்தே இவர்களது நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரிகின்றது.

என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி தமது இலக்கை அடைவதற்காக எத்தனையோ வழிகளைக் கையாண்டு தோற்றுப்போனவர்கள் இப்போது இப்படியான தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப முயல்கின்றார்கள் என்பதே உண்மை.

கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளது மௌனிப்புக்குப் பின்னர் கிளிநொச்சிக்கு வந்து அலுவலகம் அமைத்துத் தங்கியுள்ள மஹிந்த ராஜபக்சவின் கூட்டாளிகளில் ஒருவரான ஈ.பி.டி.பி சந்திரகுமாரும் அவரது கூட்டத்தாரும் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதனைத் தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது நாம் ஈ.பி.டி.பி இல்லை.

இப்போது நாம் சமூக நீதிக்கான இயக்கம் என்று கூறிக்கொண்டு தமது சுய லாபத்திற்காக கிளிநொச்சி வாழ் மக்களை மலையகத்தார், நெடுந்தீவார், வடமராட்சியார், வன்னியார், தீவார், வலிகாமத்தார், தென்மராட்சியார், யாழ்ப்பாணத்தார் என்ற பிரிவினைகளையும் சாதிப் பாகுபாட்டினையும் கூறி மக்களைக் குழப்பி தமது இலக்கினை அடைய பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடை என்றும் குறிப்பிட்டுள்ளார்.