பிரபாகரனுக்குப் பின்னர் தமிழ் மக்களை கேட்பாரும் இல்லை, பார்ப்பாரும் இல்லை: கிருஷ்ணபிள்ளை

Report Print Rusath in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை கேட்பாரும் இல்லை, பார்ப்பாரும் இல்லை என சிலர் நினைக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தலைமைகள் பேசி பெறவேண்டிய அனைத்தையும் பேரம் பேசிப் பெறும் காலம் உருவாகியுள்ளது.

இச்சூழலை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாசைகளாகும்.

கடந்த கால அரசாங்கத்தைக் குறை கூறியவர்கள், அரசியல் லாபம் தேடுபவர்கள் தற்போதைய அரசாங்கத்தையும் குறைகூறி வருகின்றனர். யாராக இருந்தாலும் இலங்கை நாட்டை நேசிக்கின்ற, இலங்கையர் என்ற எண்ணத்துடன் மாற்றமடைய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், சிறையிலுள்ளவர்கள் சம்பந்தமாகவும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா முன்மொழிவு ஒன்றை முன்வைத்து விட்டு அதற்கு ஆதரவாக தமிழ் அரசியல் வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா கடந்த கால அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து பல இளைஞர், யுவதிகளை சிறையிலே அடைத்தும், பல உயிர்களையும் பறித்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தோம்.

எனவே செய்ததை எல்லாம் செய்து விட்டு ஆட்சியிலே அமைச்சராக இருந்த காலத்தில் சிந்திக்க முடியாதவற்றை தற்போது நாடாளுமன்றத்திலே கூறி மக்களை விடுதலை செய்யுமாறு தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூறுவது எந்த வகையில்? என டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்நாட்டில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களோடு சேர்ந்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் ஏனைய சிறுபான்மை மக்களும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து தாங்கள் மாத்திரம் வாழ வேண்டும் என நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மாறாக தமிழ் தலைமைகளும் சிந்தித்து மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் இஸ்லாமிய மக்களின் நிலை என்னாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே இனிமேலும், சிறுபான்மை இனங்களாக வாழ்கின்ற தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும், வேறுபட்டு வாழ்கின்ற சூழ்நிலைகளை இனிமேலும் யாரும் உருவாக்க வேண்டாம்.

அவ்வாறு உருவாக்கினால், அது இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையாகத்தான் மாறும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை கேட்பாரும் இல்லை, பார்ப்பாரும் இல்லை எனச் சிலர் நினைக்கின்றார்கள்.

இதனை வைத்துக்கொண்டு நாம் நினைத்ததை எல்லாம் சாதிக்க முடியும் எனவும் நினைக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு வைராக்கிய நிலையை உருவாக்கினால் தமிழ் தலைமைகளும் அரசாங்கத்தோடு இணைந்து, செயற்படுகின்ற சூழ்நிலையை உருவாக்குகின்றவர்களாக இஸ்லாமிய நண்பர்கள் திகழக் கூடாது என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டாலும் அவர்களின் இடத்திற்கு பதிலாக மன்னார், புத்தளம், தம்புள்ள போன்ற பகுதிகளில் மாற்று காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அண்மையில், முல்லைத்தீவிலே முஸ்லிம் மக்களைக் குடியேற்ற திட்டமிட்டதாகவும், அதற்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அறிகின்றேன்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், மீனோடைக்கட்டு, மாணிக்கமடு, திராய்மடு, நிந்தவூர், அட்டப்பள்ளம், வீரமுனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நீலாவணை, ஆரையம்பதி உள்ளிட்ட பல கிராமங்களை இஸ்லாமிய மக்கள் ஆக்கிரமித்துள்ளன.

அத்தோடு, ஓட்டமாவடியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தை அழித்து விட்டு அந்த இடத்தில் மார்க்கட் கட்டினேன் என தற்போதைய அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காணொளிகளில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தமிழ் மக்களின் பல காணிகள் தற்போதும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தமிழ் தலைவர்கள் கண்டும் காணாதது போல் இருக்கின்ற வேளையில், தாங்கள்தான் பாதிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது என இஸ்லாமியத் தலைவர்கள் கூறி வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.