வீட்டு வேலைக்கு மலையக மக்கள் என்ற நிலையை மாற்ற வேண்டும்

Report Print Thiru in அரசியல்

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு லிந்துல்ல அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்களின் வறுமைக்கு காரணம், மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தனவந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர்.

காரணம் இவர்கள் படிக்கவில்லை. வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று. நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா?

அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது 13 வருட கல்வி, கட்டாய கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. சாதாரண தரம் சித்தியடையாத போதிலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியும் என்று கூறினார்.

இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.