தமிழர்களுக்கு நீதியை வழங்க நல்லாட்சி அரசு தயாரில்லை! அருட்தந்தை சக்திவேல்

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மீது இனவாத மற்றும் அடக்குமுறை சிந்தனை அடிப்படையிலேயே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கோபத்தை வெளிக்காட்டியுள்ளார் என்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான ஐ.நா அறிக்கையாளர் எமர்சன் பென், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் ஏனைய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இவற்றை நிராகரிக்கும் வகையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் என அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

அவரின் கருத்துகளுக்கு செவிமடுக்காமல் தனது இனவாத மற்றும் அடக்குமுறை சிந்தனை அடிப்படையில் நீதி அமைச்சர் கோபத்தை வெளிக்காட்டி இருக்கின்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம், வன்முறையைப் பாவித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை என்பதையும், அவ்வாறு பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்பதையும் நீதி அமைச்சர் நிரூபிப்பாரா?

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தமிழ்ப் பகுதி நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதையும், நிராகரிக்கப்பட்ட அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெற்கு நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு முயற்சித்ததையும் நீதி அமைச்சரால் மறுக்க முடியுமா?

இலங்கை அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ள ஒரு நீதிமன்றம் நிராகரித்த வாக்குமூலத்தை இன்னுமொரு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அத்தோடு அரசியல் கைதிளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு 2016 நவம்பர் 23ம் திகதி, அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது.

அந்த அறிக்கை 2016.11.24ம் திகதி ஜனாதிபதி செயலகத்தால் நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கத்தை நீதி அமைச்சர் வாசித்துள்ளாரா? என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தற்கால தேசிய அமைப்பு கேள்வி எழுப்புகின்றது.

நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் 71 புலி உறுப்பினர்கள் மட்டுமே இன்று தடுப்பில் உள்ளனர். இவர்கள் மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள்.

இவர்களை விடுதலை செய்ய முடியாது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளமை நீதியை அவமதிக்கும் செயலாகும். தமிழர்களுக்கு எதிராக - நீதிக்குப் புறம்பாக செயற்பட முடியும் என்பதாகவே இவரின் இந்தக் கூற்று அமைந்துள்ளது.

போர்க்குற்றம் இடம்பெறவில்லை, இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டோம் என நீதி அமைச்சர் கூறி இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்கும் செயல்.

அது மட்டுமல்ல உண்மையை ஏற்றுக்கொள்ள நல்லாட்சி அரசு ஆயத்தமில்லை என்பதை எடுத்துக்காட்டுவதோடு நல்லிணக்கம் என்பதெல்லாம் அரசியல் முகமே தவிர, இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இவர்கள் காலத்தில் இடம்பெறப் போவதில்லை என்பது தெளிவாகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.