அமைச்சு பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்யவில்லை: சிவாஜிலிங்கம் மறுப்பு

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சு பதவிக்கு புதிய ஒருவரை இது வரையில் ரெலோ கட்சி பரிந்துரை செய்யவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சு பதவிக்கு விந்தன் கனகரத்தினம் அவர்களை ரெலோ அமைப்பு பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரெலோ அமைப்பின் உயர்மட்ட குழு கூடியது. இதன் போது பா.டெனீஸ்வரன் கட்சியின் விதிகளுக்கு முரணாக செயற்பட்டிருக்கும் நிலையில் அவரை பதவி நீக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

அந்த பதவிக்கு புதியவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பாக பேசப்பட்ட நிலையில் அது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சி இதுவரை எவரையும் பரிந்துரை செய்யவில்லை.

எனினும் நாளை மறுதினம் 19ம் திகதி கட்சியின் உயர்மட்டம் மீண்டும் கூடி புதிய மீன்பிடி அமைச்சராக பொறுப்பேற்கத்தக்க ஒருவரை பரிந்துரை செய்யவுள்ளது என தெரிவித்துள்ளார்.