கடற்படை அதிகாரி டி.கே.பி. தசநாயக்கவின் கைதுக்கு காரணமான கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவை கைது செய்யும் வகையிலான விசாரணைகளை ஏற்கனவே வழிநடத்தியது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட செய்த பின்னர், கடந்த 2009 -06-15ம் திகதி முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரன ஆகிய மூவருடன் கோத்தபாய ராஜபக்ச இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் விசாரணைகளை நடத்துமாறு கோத்தபாய விஜய அமரசிங்கவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை இலக்கம் சி.267/2009 சி.எம். என பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பிரதான பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் சம்பத் முனசிங்க, பணம் சம்பாதிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி வசந்த கரன்னாகொட, அப்போது குற்றத் தடுப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த அனுர சேனாநாயக்கவிடம் 2009 -05-28ம் திகதி எழுத்து மூலமான முறைப்பாட்டை செய்திருந்தார்.

கடற்படை அதிகாரிகளின் குடியிருப்பில் சம்பத் முனசிங்க வசித்து வந்த இலக்கம் 8 என்ற அறையை சோதனையிட்ட போது சம்பத் முனசிங்க சம்பாதிக்க முடியாத அளவுக்கு அதிகமான பணம், பல்வேறு துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள், பலரது தேசிய அடையாள அட்டைகள், சில வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் முறைப்பாட்டில் கூறியிருந்த கரன்னாகொட விசாரணையை நடத்துவது சிறந்தது எனக் கூறியிருந்தார்.

அன்றைய பொலிஸ் மா அதிபர் மற்றும் அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஆகியோர் தொலைபேசியில் விடுத்த உத்தரவுக்கு அமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் கடந்த 2009 - 06 -10ம் திகதி விசாரணைகளை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட புதிய விசாரணைகளில் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ஊடக கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட சம்பத் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.