சைட்டம் பிரச்சினை மேலும் தீவிரமாகும்! வைத்திய பீட ஆசிரியர்கள் சம்மேளனம்

Report Print Rakesh in அரசியல்

நெவில் பெர்னாந்து போதனா வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்பதன் மூலம் சைட்டம் பிரச்சினை தீவிரமாகுமே தவிர, குறையப்போவதில்லை என பல்கலைக்கழக வைத்தியபீட ஆசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கராப்பிட்டிய வைத்திய பீடத்தின் பேராசிரியர் மஹிந்த கோமலகே தெரிவித்ததாவது,

தனது வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்கவேண்டுமென்பது டாக்டர் நெவில் பெர்னாந்துவின் தனிப்பட்ட கோரிக்கையாகும். அதன்மூலம் பயனடையப்போவது அவர் மட்டுமே.

அந்த வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்கவேண்டுமென அரச மருத்துவர்கள் சங்கமோ, வைத்திய பீடங்களின் தலைவர்களோ, அரச பல்கலைக்கழக மாணவர்களோ வற்புறுத்தவில்லை. டாக்டர் நெவில் பெர்னாந்துவின் தனிப்பட்ட வேண்டுகோளை அரசு நிறைவேற்றியுள்ளதே தவிர, வேறெந்த சாதனையும் நடக்கவில்லை.

அத்துடன், இந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிகள் உட்பட சகலரும் அரசால் பொறுப்பேற்கப்படுகிறார்கள். அங்குள்ள வைத்தியர்களில் பெரும்பாலானோர் ஓய்வுபெறும் நிலையில் அல்லது அதைக் கடந்த நிலையில் உள்ளவர்கள். அத்துடன்,

அங்குள்ள தாதியர்கள் இலங்கை தாதியர் கவுன்சிலிலோ அல்லது இலங்கை மருத்துவ கவுன்சிலிலோ பதிவு பெறாதவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் தாதியர் கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள்.

எனவே, இத்தகைய குறைபாடுகளுடன் அரசு பொறுப்பேற்கும் நெவில் பெர்னாந்து போதனா வைத்தியசாலையை தொடர்ந்து நிர்வகிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிச்சயமாக வரும் என்று கூறியுள்ளார்.