சிக்கலில் நீதியமைச்சர்? முடிவெடுக்கும் ஐ.தே.க

Report Print Steephen Steephen in அரசியல்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடுகள் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனம் ஒன்று விற்பனை செய்தமை முற்றிலும் தவறான செயல் என விஜயதாச ராஜபக்ச ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

பொது சொத்தான அம்பாந்தோட்டை துறைமுகத்தை எப்படியாவது மக்கள் மயப்படுத்தாது ஓயப்போவதில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து அமைச்சரவையின் கூட்டு தீர்மானத்தை விமர்சிக்கும் நடவடிக்கை என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இணங்கி எடுத்த தீர்மானத்தை விமர்சிப்பது பாரதூரமான பிரச்சினை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சம்பந்தமாக கட்டாயம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மினுவங்கொடையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.