நாட்டில் நிலவும் பாதுகாப்பினைப் பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர்: சஜித்

Report Print Sumi in அரசியல்

நாட்டில் நிலவும் சமாதானத்தினைப் பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர், இதனால் வடக்கில் பாதுகாப்பு இல்லை, வடக்கில் நிலமைகள் சரியில்லை என்ற கதைகளை உருவாக்கி பொய்யான பிரச்சாரங்களைச் செய்வதன் மூலமாக எமது நாட்டினைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து மேசன் தொழில் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.திருமறைக் கலா மன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் பாதுகாப்பில்லை, குழப்ப நிலைகள் காணப்படுகின்றதாக கூறி மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள்.

அவ்வாறான நிலைமை இல்லை என்பதனை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பின்றி சாதாரண மனிதனாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.

மேசன் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வருமானத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாணத்தில் 2,551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிகழ்வுகள் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில், குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வட மாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

தேசிய வீடமைப்பு அமைச்சினால் புதிதாக குடிநீர் மற்றும் மின்சாரம் வசதிகள் உள்ளடங்கலாக கட்டப்பட்டு வரும் 49 வீடுகளும் திறந்து வைப்பதற்கு நான் 49 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வேன் என்றார்.

எதிர்வரும் 3 வருடங்களில் 2,500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டுமென்பதே எமது நோக்காக இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் எந்த விதத்திலும் மத மற்றும் சாதி வித்தியாசம் இல்லாமல் ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில், சகோதரத்துவத்தினையும் அன்பையும், சமாதானத்தினையும் பகிர்ந்து வாழ வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நல்லிணக்க முயற்சிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் நாங்கள் அனைவரும் இன, மத, சாதி வேற்றுமையின்றி நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் இந்த நாட்டில் வாழ வேண்டும்.

எமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். எமது உரிமைகள் துரிதப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், நான் இன்றைய தினம் ஒரு அமைச்சராக இல்லாமல் சாதாரண மனிதனாக இரு பாதுகாப்பு உத்தியோகத்தருடன், தனிமையில் வந்துள்ளேன்.

அதனால் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி, வெட்டுக்களையும், சீரழிவுகளையும் ஏற்படுத்தும் முயற்சிகளை பாதகமாக்குவதற்காகவே இன்று தனிமையில் பயணத்தினை மேற்கொண்டுள்ளேன்.

எமது நாட்டினை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எனவே, பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை எதிர்த்து நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.