அமைச்சுப் பதவி எப்போது பறிக்கப்படும் என்ற அச்சத்தில் : அனந்தி!

Report Print Suman Suman in அரசியல்

வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி எப்போது பறிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது, இருந்தாலும் நான் ஒரு பெண்ணாக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன்,

யுத்த காலத்தில் கூட்டுறவு பணியாளர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது. யுத்தம் இடம்பெற்ற சூழலில் காயமுற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் பல்வேறு உதவிகள் இந்த கூட்டுறவு சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டன, குறிப்பாக வடக்கில் கூட்டுறவு சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்கின.

இன்று நான் அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன். வழங்கப்பட்ட அமைச்சு பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது, இருந்தாலும் நான் ஒரு பெண்ணாக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் இன்று அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களுடன் சற்று முன் பேசியுள்ளேன்.

எவ்வாறாயினும் நான் ஒரு பெண்ணாக இருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த நிகழ்வின் போது கூட்டுறவாளர் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, கூட்டுறவு பணியில் ஈடுபட்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.