மஹிந்த அமரவீரவின் காலில் விழவும் தயார்! டிலான் பெரேரா

Report Print Aasim in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக பேசுவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் காலில் விழவும் தான் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை சுதந்திரக்கட்சி செயற்பாட்டாளர்களின் ஒன்றுகூடல் இன்று பதுளை நகரின் தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா, தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிக்கும் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமன்றி சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா அம்மையாரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டுமே எனக்கு ஆதரவாக இருக்கின்றார்.

எனவே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கையொன்றை எடுக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக அவரது காலில் விழவும் தயாராக இருக்கின்றேன் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.